தமிழகம்

நிறவெறி விமர்சனம்: மீண்டும் காக்கை புகைப்படத்தை பதிவிட்ட கிரண்பேடி

செய்திப்பிரிவு

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி மீது நிறவெறி விமர்சனங்கள் எழுந்த  நிலையில் மீண்டும் அவர் காக்கையின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இடையூறு செய்வதாகக் கூறி கடந்த 13-ம் தேதி முதல் ஆளுநர் மாளிகை முன்பு முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தொடர் தர்ணா போராட்டத்தை நடத்தினர்.

இதுகுறித்து கிரண் பேடி தனது ட்விட்டர் பக்கத்தில், ''ஊடகத்திலிருந்து ஒருவர் என்னிடம் தர்ணாவும் யோகாவா? என்ற ஒரு சுவாரஸ்யமான  கேள்வியை கேட்டார்...  அதற்கு நான், ஆமாம்... அது நீங்கள் அமர்ந்திருக்கும் நோக்கத்தைச் சார்ந்தது. எந்தவிதமான ஆசனாவில் நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள், எந்தவிதமான சத்தத்தை எழுப்பினீர்கள் என்பதைப் பொறுத்தது'' என்று கூறி இரண்டு காகங்கள் அமர்ந்திருக்கும் படத்தைப் பதிவிட்டு இருந்தார்.

இதனைத் தொடர்ந்து கிரண்பேடியின் பதிவுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. கிரண்பேடி புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை நிற ரீதியாக விமர்சித்திருக்கிறார் என்று நெட்டிசன்கள் பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்தன.

இந்த  நிலையில் மீண்டும் இன்று (புதன்கிழமை) கிரண்பேடி தனது ட்விட்டர் பக்கத்தில், ஆளு நர் மாளிகையிலிருந்து இரண்டு படங்கள்...இயற்கை அமைதி.. தவிர்க்க முடியாதவை” என்று பதிவிட்டிருந்தார். இதிலும் காக்கையின் படங்கள் இடப்பெற்றிருந்தனர்.

இதனை தொடர்ந்து மீண்டும் சர்ச்சை ஏழுந்துள்ளது.

SCROLL FOR NEXT