பாஜகவின் கொள்கை வேறு, எங்களுடைய கொள்கை வேறு என்று கதர்த்துறை அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்தார்.
சிவகங்கையில் ரூ.2.5 கோடி மதிப்பில் தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாள் விழாவையொட்டி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியுடன் அதிமுகவின் 2 ஆண்டு சாதனை விளக்கப் புகைப்படக்கண்காட்சியும் நடைபெற்றது.
பின்னர் கதர்த்துறை மற்றும் கிராம்த்தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா சிவகங்கை மாவட்டத்தின் பல ஊர்களில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அதிமுக, பாஜக, பாமக என வலுவான கூட்டணியை அமைத்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்கள், ‘தமிழகத்தின் இடங்களை கொஞ்சம்கொஞ்சமாகப் பிடிப்போம்’ என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் சொல்லியிருக்கிறாரே என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு அமைச்சர், ‘அது பாஜகவின் கொள்கை. அம்மா ஜெயலலிதாவின் ஆட்சியை சிறப்பான முறையில் கொண்டுசெல்வது எங்களின் கொள்கை. பாஜகவின் கொள்கை வேறு. அதிமுகவின் கொள்கை வேறு. கொள்கைக்கும் கூட்டணிக்கும் சம்பந்தமில்லை’ என்றார்.
மேலும், ஜெயலலிதா இருந்தபோதே, தேமுதிகவுடன் கூட்டணி வைத்திருந்தார். அதேபோல், மேலும் வலுவாக கூட்டணி அமையவேண்டும் என்பதற்காக, தேமுதிகவுடன் கட்சித் தலைமை பேசிவருகிறது என்று அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்தார்.