மதியம் 12 மணிக்கு மேல் மதுக்கடைகளைத் திறக்க வேண்டும் என்ற நடைமுறையை தமிழக அரசு கொண்டுவட்த பிறகும், 24 மணி நேரமும் சட்ட விரோதமாக மது விற்பனை ஆங்காங்கே நடக்கிறது. இந்நிலையில் சேலத்தில சட்டவிரோதமாக மது விற்கும் வீடுகளுக்குள் பெண்கள் புகுந்து போலீஸார் முன்னிலையில் மது பாட்டில்களை உடைத்தெறிந்த சம்பவம் இன்று நடந்தது.
தமிழகம் முழுவதும் மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மது விற்பனை நேரத்தைக் குறைக்க மதியம் 12 மணிக்கு மேல் விற்பனை என்கிற முறையை அரசு கொண்டுவந்தது. ஆனாலும் சட்டவிரோத மது விற்பனை சில இடங்களில் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
சேலம் மாவட்டம் சூரமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இதேபோன்று சமூக விரோதிகள் குடியிருப்புப் பகுதிகளில் ஆண்டுக்கணக்காக 24 மணி நேரமும் அமோகமாக மது விற்பனை செய்து வருவதை அப்பகுதி மக்கள் பல முறை எதிர்த்தும் விற்பனை செய்யும் நபர்கள் அவர்கள் செயலை நிறுத்தவில்லை.
இதனால் வெகுண்டெழுந்த சேலம், சூரமங்கலம் ஜாகீர் அம்மாபாளையம் மக்கள் சேலம் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஊடகங்கள் அங்கு திரண்டன. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸாரும் சமாதான முயற்சியில் ஈடுபட்டனர். சட்டவிரோத மது விற்பனை செய்யும் நபர்களைப் பிடித்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்து மறியலைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
ஆனால் அங்கு கூடியிருந்த பெண்கள் அதை ஏற்கவில்லை. ''ஆண்டுக்கணக்கில் எத்தனை முறை புகார் அளித்திருப்போம். ஒரு நடவடிக்கையாவது எடுத்தீர்களா? நாங்கள் எங்கெங்கு மதுபானம் விற்கப்படுகிறது என்று காட்டுகிறோம். விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் பார்க்கலாம்?'' என ஊடகங்கள் முன்னிலையில் தங்கள் பகுதிக்குள் நுழைந்தனர்.
இதனால் செய்வதறியாது திகைத்த போலீஸார் அவர்களுடன் சென்றனர். அப்போது பெண்கள் அனைவரும் ஒன்று திரண்டு அப்பகுதியில் வீடுவீடாகச் சென்று சட்டவிரோத மது விற்பனை செய்பவர்களின் வீடுகளை அடித்து உடைத்து மதுபானங்களைக் கைப்பற்றி உடைத்தனர். தங்களுக்கு ஏற்படும் சிரமங்களையும் பெண்கள் ஆவேசத்துடன் தெரிவித்தனர்.
''அதிகாலை 4 மணிக்கு விற்பனை ஆரம்பமாகிறது. மது குடிக்க வருபவர்களால் அப்பகுதியில் உள்ள பெண்கள், குழந்தைகள் நிம்மதியாக வெளியே செல்ல முடியவில்லை. நள்ளிரவு வரை குடித்துவிட்டு பெண்களைக் கேலி செய்வது, குழந்தைகளைத் தாக்குவது, தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்வது, வழியில் செல்பவர்களை வம்பிழுப்பது என சட்டம் ஒழுங்குக்கு பெரிய பிரச்சினையாக உள்ளது.
இதுகுறித்து காவல்துறையில் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுபோன்ற 24 மணிநேர மது விற்பனையால் ஆண்களும் எந்நேரமும் மதுபோதையில் உள்ளனர்'' என அப்பெண்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
பெண்கள் திடீரென திரண்டு போர்க்கொடி தூக்கியதும் அது ஊடகங்களில் வெளியானதால் மது விற்பனை செய்யும் நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். அப்பகுதியைச் சார்ந்த ஆண்களும் பெண்களின் போராட்டத்துக்குப் பக்கபலமாக நின்றது குறிப்பிடத்தக்கது.