தமிழகம்

இலங்கைக்கு தமிழக வீரர்களை அனுப்பியதால் இருவர் சஸ்பெண்ட்: உடனே திரும்ப வீரர்களுக்கு உத்தரவு

டி.எல்.சஞ்சீவி குமார்

இலங்கையில் நடந்துவரும் ஆசிய அளவிலான ‘யூத் வாலிபால் சாம்பியன்ஷிப் 2014’ போட்டிகளில் இந்திய அணி சார்பில் விளையாட இரு தமிழக வீரர்களை அனுப்பியதால், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வாலிபால் பயிற்சியாளர் மற்றும் மேலாளர் ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விளையாடச் சென்ற இரு தமிழக வீரர்களும் திரும்பி வர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து விளையாட்டுத் துறை அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் பல்வேறு விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன. இதில் தமிழ்நாடு வாலிபால் கழகத்தின் வீரர்களும் பயிற்சி பெறுகின்றனர். இங்கு பயிற்சி பெறும் வீரர்களின் கனவே இந்திய அணியில் இடம் பெற்று, உலகளாவிய போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்பதுதான்.

இந்த நிலையில்தான் தற்போது இலங்கையில் ஆசிய அளவிலான யூத் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள் சனிக்கிழமை (செப். 6) தொடங்குகின்றன. இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்கிற நோக்கத்தில் தமிழக வாலிபால் அணியைச் சேர்ந்த வீரர்கள் கடந்த இரு மாதங்களாக பஞ்சாப் உள்ளிட்ட இடங்களில் நடந்த தேசிய அளவிலான பயிற்சி முகாம்களில் கலந்துகொண்டு கடுமையான பயிற்சிகளைப் பெற்றனர். இதில் பல்வேறு சோதனைகளுக்கு பிறகு தமிழகத்தை சேர்ந்த இரு வீரர்கள் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டனர். இருவரும் தற்போது இலங்கையில் நடக்கும் போட்டியில் இந்திய அணிக்காக விளையாட அனுப்பப்பட்டுள்ளனர்.

இவர்களை எப்படி இலங்கைக்கு அனுப்பலாம் என்று கூறி உயர் அதிகாரிகள் சிலர் வாலிபால் பயிற்சியாளர் ஆண்டனியையும், மேலாளர் நாகராஜனையும் தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளனர். ஆனால், விஷயம் வெளியே கசிந்துவிடக் கூடாது என்பதற்காக இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட நாகராஜன், வேலூரில் பளு தூக்கும் பயிற்சியாளராக 24 ஆண்டுகள் இருந்து, 6 மாதங்களுக்கு முன்புதான் சென்னைக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார். ஏராளமான பளு தூக்கும் விளையாட்டு வீரர்களை உருவாக்கி இருக்கிறார். சமீபத்தில் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற சதீஸும், இவரது பயிற்சி பட்டறையில் தயாரானவர்தான்” என்றனர். இதற்கிடையே நேரு விளையாட்டு மைதானத்தில் இருந்த சென்னை வாலிபால் அசோசியேஷனின் அலுவலகத்தையும் அதிகாரிகள் காலி செய்யச் சொல்லி பூட்டு போட்டுவிட்டனர். அங்கிருக்கும் வாலிபால் வீரர்களையும் வெளியேற வாய்மொழி உத்தரவிடப் பட்டுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து விளையாட்டு வீரர்கள் ‘தி இந்து’விடம் கூறுகையில், “இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்பதே எங்கள் ஒவ்வொருவரின் கனவு, லட்சியம். நேரு ஸ்டேடியத்தின் ஹாஸ்டலில் தங்கி பயிற்சி எடுக்கும் வீரர்கள் யாரும் வளமையான பின்னணியைக் கொண்டவர்கள் அல்ல. பெரும்பாலானவர்கள் கிராமங்களில் வறுமையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்திருக்கிறோம்.

தற்போது விளையாட்டுத் துறை அலுவலர்களை தற்காலிக பணிநீக்கம் செய்தது மட்டுமின்றி, இலங்கைக்கு சென்ற இரு வீரர்களையும் உடனடியாக கிளம்பி வர உத்தரவிட்டுள்ளனர். அவர்கள் வெள்ளிக்கிழமை (இன்று) சென்னைக்கு திரும்புகின்றனர். அந்த இரு வீரர்களின் விளையாட்டு வாழ்க்கையுமே கேள்விக்குறியாக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அவர்களை காப்பாற்றுங்கள். உங்கள் அரசியலுக்கு எங்களை பலியிடாதீர்கள்..” என்றார்கள்.

இதுகுறித்து தகவல் அறிய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர், செயலாளர் ஜெயக்கொடியை பலமுறை தொடர்பு கொண்டோம்; குறுந்தகவல் அனுப்பினோம். பதில் இல்லை. அவர் பதில் சொல்லும்பட்சத்தில் அதையும் பிரசுரிக்க தயாராக இருக்கிறோம்.

SCROLL FOR NEXT