வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள 60 லட்சம் பேருக்கு ரூ.2000 சிறப்பு நிதி வழங்கும் திட்டத்தை வரும் 24-ம் தேதி சென்னையில் நடக்கும் விழாவில் முதல்வர் பழனிசாமி தொடங்கிவைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டப்பேரவையில் கடந்த 11-ம் தேதி, ‘‘தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.2000 சிறப்பு நிதியாக வழங்கப்படும்’’ என 110-விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து, அந்த தொகை 60 லட்சம் பேரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து கடந்த 13-ம் தேதி இத்திட்டத்தை செயல்படுத்துவதற் கான அரசாணை பிறப்பிக்கப்பட் டது. இதில், கிராமப்புறம், நகர்ப் புறத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் பட்டியலை சரி பார்த்தல், அவர்களிடம் வங்கிக் கணக்கு விவரங்களை பெற களப் பணியாளர்களை நியமிப்பது குறித் தும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும், இந்த திட்டத்தை கண் காணிக்க 2 மாவட்டங்களுக்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரி என 16 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப் பட்டனர்.
ஜெயலலிதா பிறந்த நாள்
தற்போது கணக்கெடுப்பு மற்றும் வங்கி விவரங்களை பெறும் பணி கள் விரைவாக நடந்து வருகின் றன. இந்த வகையில் 80 சதவீதத் துக்கு மேல் பணிகள் முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பிப்.24-ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினத்தில், சென்னையில் நடக்கும் அரசு விழாவில் இத் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கிவைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அதே நாளில் 60 லட்சம் பேருக்கும் பணம் சென்று சேரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மகளிர் நல மேம்பாட்டுத் துறை உள்ளிட்ட துறையினர் மேற் கொண்டுள்ளனர்.