விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை அடுத்த காரியாபட்டி பஸ் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த அரசு பஸ் மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் பஸ் முற்றிலும் தீப்பற்றி எரிந்து சேதம் அடைந்தது.
காரியாபட்டியிலுள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான டிஎன் 67 என் 0280 என்ற பஸ் நேற்று பகல் 11 மணிக்கு காரியாபட்டியிலிருந்து புறப்பட்டு நரிக்குடி சென்றது. பின்னர், அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் காரியாபட்டி பஸ் நிலையத்துக்கு மதியம் 1 மணிக்கு வந்து நின்றது. அதைத்தொடர்ந்து மதியம் 1.05 மணிக்கு பஸ் கம்பிக்குடிக்கு புறப்படவிருந்தது.
ஓட்டுநர் பாலசுப்பிரமணியனும், நடத்துநர் முருகனும் பஸ்ஸை நிறுத்திவிட்டு சுமார் 7 மீட்டர் தூரத்திலிருந்த அரசு போக்குவரத்துக் கழக பூத் அலுவலகத்தில் கையெழுத்திடச் சென்றனர். அப்போது, யாரும் எதிர்பாராத நேரத்தில் பஸ்ஸின் பின்பக்கத்திலிருந்து திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. தீ வேகமாக பஸ்ஸின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவி முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
அப்போது, பஸ் என்ஜின் திடீரென இயங்கியதால் தீப்பிடித்து எரிந்தபடியே முன்பக்கமாக சில அடி தூரம் நகர்ந்து சென்று எதிரே இருந்த செல்போன் கடையின் தடுப்புச் சுவரில் மோதி நின்றது. இதைக் கண்டதும் பஸ் நிலையத்திலிருந்த பயணிகளும், கடைகளிலிருந்த வியாபாரிகளும் பதறியடித்து ஓட்டம் பிடித்தனர். பஸ் நிலையத்தில் கடை நடத்திவரும் சிலர் குடங்களில் தண்ணீர் எடுத்துவந்து ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழியிலிருந்து இரு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து தீயை அணைத்தன.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, காரியாபட்டி உட்பட விருதுநகர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு பஸ்கள் அனைத்தும் நிறுத்தப் பட்டன. காரியாபட்டி பஸ் நிலையத்தில் நேற்றும் பயணிகள் நடமாட்டம் குறைவாக இருந்ததாலும், நிறுத்தப்பட்ட அரசு பஸ்ஸில் பயணிகள் யாரும் இல்லாததாலும் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன், எஸ்.பி. மகேஸ்வரன் மற்றும் காரியாபட்டி போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். பஸ் நிறுத்தப்பட்டதும் பின்பக்கமாக வந்த 3 மர்ம நபர்கள் பஸ்ஸுக்குள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. சம்பவம் குறித்து காரியாபட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து எஸ்.பி. மகேஸ்வரனிடம் கேட்டபோது, தீப்பற்றி எரிந்த பஸ்ஸிலிருந்து சில தடயங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.