தமிழகம்

சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து வழக்கு: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் விலங்குகள் நல ஆர்வலர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை பெரியதடாகம் ‌வனப்பகுதியில் விவசாய நிலங்களை சின்னத்தம்பி என்ற காட்டுயானை சேதப்படுத்துவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். சின்னத்தம்பியை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்து, ஜிபிஎஸ் கருவி பொருத்தி டாப்சிலிப் வனப்பகுதியில் பகுதியில் விட்டனர்.

மீண்டும் கோட்டூர், அங்கலக்குறிச்சி சுற்றுப்பகுதிகளிலுள்ள தென்னந்தோப்புகளில் புகுந்த சின்னத்தம்பியை வனத்துறையினர் மீண்டும் காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே சின்னத்தம்பி குறித்து கருத்து தெரிவித்த தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், காட்டுக்குள் விரட்ட முடியாத காரணத்தினால் சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றப்படும் என  தெரிவித்தார்.

இந்நிலையில், சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதுதொடர்பாக விலங்குகள் நல ஆர்வலர் அருண் பிரசன்னா தரப்பில் நீதிபதிகள், மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.

அதில் யானைகள், மனிதர்கள் மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்கவும், இதனை தீர்வு காண குழு அமைக்க உத்தரவிட வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருப்பதாக தெரிவித்தார்.

மேலும், யானைகளை வேறு இடத்துக்கு கொண்டு செல்வது தொடர்பாக விதிகளை வகுக்க வேண்டும் என்றும், அதுவரை காட்டுயானை சின்னத்தம்பியை கும்கி யானையாக மாற்றாக் கூடாது என வனத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என இடைக்கால கோரிக்கை விடுத்தார்.

இந்த முறையீட்டை கேட்ட நீதிபதிகள், இதுசம்மந்தமாக மனுதாக்கல் நடைமுறைகள் முடிந்தால் உணவு இடைவேளைக்கு பிறகு விசாரணைக்கு எடுத்து கொள்ள அனுமதி அளித்தனர்.

மீண்டும் இன்று மதியம் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் சின்னத்தம்பி யானையை வனத்துறைக்குள் அனுப்பும் முயற்சியில் ஏற்கெனவே அதற்கு காயம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. ஏற்கெனவே மதுக்கரை மகாராஜா என்ற யானையைக் கும்கியாக மாற்றும்போது அது இறந்து விட்டதை மனுதாரரின் வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

அப்போது, தமிழக அரசின் தலைமை வனப் பாதுகாவலர் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், சின்னதம்பி யானையைக் கும்கியாக மாற்றும் திட்டம் ஏதும் இல்லை எனத் தெரிவித்தார். யானையை மீண்டும் காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளே மேற்கொள்ளப்படுவதாகவும், யானையைக் கும்கியாக மாற்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், யானையைத் தூக்க ஜேசிபி இயந்திரங்கள் பயன்படுத்தியுள்ளதால் யானை காயமடைந்துள்ளதையும், அமைச்சர் தெரிவித்த கருத்து செய்தியாக வந்துள்ளதையும் சுட்டிக்காட்டினர்.

இந்த மனுவுக்குத் தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் திங்கட்கிழமைக்குத் தள்ளிவைத்தனர்.

SCROLL FOR NEXT