தமிழகம்

மறைந்த தலைவரின் நினைவாக வளைவு கட்டுவது மாநகரின் வளர்ச்சி திட்டமா? அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

செய்திப்பிரிவு

மறைந்த தலைவரின் நினைவாக வளைவு கட்டுவது மாநகரின் வளர்ச்சி திட்டமா? என கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் சென்னையில் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகளின் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் தினேஷ்குமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில்,  “எம்ஜிஆர் நூற்றாண்டின் நினைவாக சென்னை மெரினா கடற்கரையை ஒட்டிய காமராஜர் சாலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகில் 2.52 கோடி ரூபாய் செலவில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு கட்டும் பணிகள் நடந்து வருகிறது.

காமராஜர் சாலையில் மேம்பாட்டுப்பணிகளைத் தவிர்த்து வேறு எந்த கட்டுமானமும் கூடாது என ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் சட்டத்தின்படியும் சாலைகளின் குறுக்காக எந்தவொரு நிரந்தர கட்டுமானங்களையும் கட்டக்கூடாது. அரசியல் லாபத்திற்காகவே தற்போது எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு கட்டப்பட்டு வருகிறது. எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும்.” என கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கட்டுமான பணிகளை முடித்து நிகழ்ச்சிகள் எதுவும் இல்லாமல் திரைகளை அகற்றி கொள்ளலாம் என உத்தரவிட்டு இருந்தது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை  வழக்கறிஞர் ஆஜராகி “ஏற்கனவே சட்டப்பேரவை வைர விழா வளைவு கட்டப்பட்ட போது பின்பற்றிய நடைமுறைகளையே எம்.ஜி.ஆர் நினைவு வளைவுக்கும் அனுமதி பெறபட்டது. நிரந்தர நில பதிவேட்டில் படி காமராஜர் சாலை சென்னை மாநகராட்சி சாலை தான்” என்று விளக்கம் அளித்தார்.

அப்போது நீதிபதிகள், ஏற்கனவே வைத்த வளைவை பின்பற்றி இந்த வளைவு என்றால் மெரினா கடற்கரை ஓரத்தில் சிலைகள் வரிசையாக உள்ளது போல வளைவுகளும் வந்துவிடும் என தெரிவித்தனர்.

அரசு நிலத்தை ஆரசே ஆக்கிரமிப்பு செய்ய கூடாது என்று தெரிவித்த நீதிபதிகள் உள்ளாட்சி அமைப்புகள் பராமரிக்கும் சாலையாக இருந்தாலும் அது ஏதேனும் ஒரு நெடுஞ்சாலையாகதான் இருக்கும் என  சுட்டிகாட்டினர்.

அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் கோட்டை ரயில் நிலையம் அருகில் இருந்து தான் நெடுஞ்சாலை தொடங்குவதாகவும் மாநகராட்சி கட்டுப்பாடில் உள்ள சாலை வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ளும் போது தடையில்லா சான்றிதழ் மட்டும் பெற்றால் போதும் என தெரிவித்தார்.

நீதிபதிகள் குறுக்கிட்டு மறைந்த தலைவர் பெயரில் நினைவு வளைவு கட்டுவது வளர்ச்சி திட்டமா? என கேள்வி எழுப்பினர். சென்னை மாநகரத்தின் எந்த மாஸ்டர் பிளானுக்கு கீழ் இந்த நினைவு வளைவு அமைக்கபடுகிறது என கேள்வி எழுப்பினார்.

பின்னர் சென்னையில் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் தொடர்பான அட்டவணைகளை மாநகராட்சி, தமிழக அரசு நாளை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை நாளை தள்ளிவைத்தனர்.

SCROLL FOR NEXT