காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த ஆய்வு தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் சென்னையில் நடத்தப்பட்டது. மையத் தின் மருத்துவ விஞ்ஞானி பீனா இ.தாமஸ் தலைமையில் தொழில்நுட்ப அதிகாரி செந்தில்குமார் உட்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், சூளை, பேசின்பிரிட்ஜ் போன்ற பகுதியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆய்வு நடத்தினர்.
இந்த ஆய்வு முடிவுகள் குறித்த விவாத நிகழ்ச்சி சென்னை சேத்துப் பட்டில் உள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தில் நேற்று நடை பெற்றது. மையத்தின் இயக்குநர் சவுமியா சுவாமிநாதன் தலைமை யில் நடந்த நிகழ்ச்சியில் மருத்துவ விஞ்ஞானி பீனா இ.தாமஸ், தொழில்நுட்ப அதிகாரி செந்தில்குமார், சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரி பி.குகாநந்தம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஆய்வில் ஈடுபட்டவர்கள் இதுகுறித்து கூறியதாவது: காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து 2 மாதங்களுக்கு முறையான சிகிச்சை எடுக்கின்றனர். அதன்பின் நோய் குணமாவதற்கான அறிகுறிகள் தென்பட்டவுடன், மீண்டும் மது குடிக்கத் தொடங்கிவிடுகின்றனர். அதனால், காசநோயால் பாதிக்கப்பட்டவர் களுக்கு ஆலோசனை தேவைப்படு கிறது. நாங்கள் நடத்திய ஆய்வில் 90 சதவீதம் காசநோயாளிகள் குடிசைப் பகுதியில்தான் வசிக்கின்றனர். அதனால் குடிசைப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு காசநோய் பற்றிய விழிப் புணர்வு தேவைப்படுகிறது என்றனர்.