இந்திய ராணுவம் யாருக்கும் குறைந்தது அல்ல என, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விஜயகாந்த் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "பாகிஸ்தான் நாட்டுக்கு பதிலடி தரும் வகையில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது பாராட்டுக்குரியது. சரியான நேரத்தில் தக்க பதிலடி கொடுத்த இந்திய விமானப் படைக்கும், மத்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் தேமுதிக சார்பாக எனது நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
முன்பு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய தருணத்தில், நமது நாட்டைப் பாதுகாப்பதற்கு தன் உயிரைத் தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு, இந்த பதிலடி தாக்குதல் மிகப்பெரிய ஒரு ஆறுதலாக இருக்கும்.
இந்திய ராணுவம் யாருக்கும் குறைந்தது அல்ல என்பதை நிரூபிக்கும் வண்ணம் இன்றைய பதிலடி தாக்குதலில் ஈடுபட்ட இந்திய விமானப்படையைச் சேர்ந்த அனைவருக்கும் தேமுதிக சார்பாக எனது வாழ்த்துகள்" என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.