தமிழகம்

கஜா புயலில் சேதமடைந்த தென்னை மரத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் கேட்டு வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கி.மகாராஜன்

'கஜா' புயலில் சேதமடைந்த தென்னை மரத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூரைச் சேர்ந்த கோவிந்தராஜன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "கடந்த நவம்பர் மாதம் வீசிய 'கஜா' புயலால் தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், திண்டுக்கல் மாவட்டங்கள் கடும் சேதம் அடைந்தன. இதில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். மேலும் விவசாயப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதில் பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்கள் துண்டு துண்டுகளாகின.

தென்னை விவசாயத்தில் வருடத்திற்கு ஒரு ஹெக்டருக்கு மூன்று லட்சம் வரை வருமானம் வரும். இதனால் தென்னை விவசாயிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். ஆனால் சேதமடைந்த தென்னை மரங்களுக்கு தமிழக அரசு நிவாரணத் தொகையாக மரம் ஒன்றுக்கு ரூ.1,500 வழங்க உத்தரவிட்டுள்ளது. இது போதுமானதாக இல்லை.

எனவே தென்னை ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். மாவட்டம் முழுவதும் மரங்கள் விழுந்துள்ளதை சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் அகற்றவும் தென்னை விவசாயிகளுக்கு உயர் ரக தென்னங்கன்றுகளை மானிய விலையில் வழங்க உத்தரவிட வேண்டும்" என மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது. மனுதாரர் கோரிக்கை குறித்து தமிழக வருவாய்த்துறை செயலர், விவசாயத் துறை செயலர், மற்றும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 18-ம் தேதிக்கு  ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT