அமைச்சருக்கு வேண்டியப்பட்டவர்களுக்கு டெண்டர்களை ஒதுக்கியதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்கில் சிபிஐ, லஞ்ச ஒழிப்புத்துறை, எஸ்.பி.வேலுமணி, தலைமைச் செயலாளர் உள்ளிட்டோருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நண்பர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் தொடர்புடைய நிறுவனங்களுக்கு கோவை மற்றும் சென்னை மாநகராட்சிகளின் பெரும்பாலான டெண்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டி, செப்டம்பர் 12-ம் தேதியன்று சிபிஐ மற்றும் தமிழக லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளித்தது.
அவர்களது அறிக்கையில் 2014 ஜூன் முதல் 2015 நவம்பர் வரை கோவை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் சுற்று சுவர் அமைத்தல், குடிநீர் குழாய் பதித்தல், போன்றவைகளுக்காக கிட்டத்தட்ட 66 கோடியே 75 லட்ச ரூபாய் மதிப்புள்ள 188 டெண்டர்கள் KCP இன்ஜினியர்ஸ், SP பில்டர்ஸ் நிறுவனங்களுக்கே ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பெரும்பாலான டெண்டர்கள் கே.சந்திரபிரகாஷ், ராபர்ட் ராஜா ஆகியோரின் கே.சி.பி என்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிட்டட், வரதன் இன்ப்ராஸ்ட்ரக்சர் ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இருவருமே அமைச்சர் வேலுமணியின் நண்பர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் என கூறப்பட்டுள்ளது.
அதேபோல், சென்னை மாநகராட்சியில் 2018 ஜனவரி முதல் மே 2018 வரை விடப்பட்ட டெண்டர்களில் அர்பன் கம்யூனிட்டி ஹெல்ப் சென்டர் எனப்படும் பணிசேவை தொடர்பான டெண்டர்களிலும் அமைச்சர் வேலுமணி நண்பர் தொடர்புடைய வரதன் இன்ஃப்ராஸ்ட்ரக்சருக்கு டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த டெண்டர்களிலும் கிட்டத்தட்ட 14 கோடி ரூபாய் மதிப்புள்ள டெண்டர்களில் 88 சதவிகிதம் அந்த நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் 20 கோடி ரூபாய் வருமானம் ஈட்டிய நிறுவனங்களே சென்னை மாநகராட்சி சுகாதாரப் பிரிவு டெண்டரில் பங்கேற்கும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு வேண்டப்பட்டவர்களுக்கு குறிப்பிடப்பட்டிருந்தது.
செப்டம்பரில் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்காததால், தமிழக தலைமைச் செயலாளர் ஆளுநரிடம் முறையாக அனுமதி பெற்று லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிய வேண்டும், அதை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை நீதிமன்றம் உருவாக்க வேண்டும், முறையாக அந்த குழு விசாரணை செய்து குற்றவியல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறப்போர் இயக்க நிர்வாக அறங்காவலர் ஜெயராம் வெங்கடேசன் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது நீதிபதிகள் இது குறித்து பதிலளிக்க, தமிழக லஞ்ச ஒழிப்புதுறை இயக்குனர், தமிழக தலைமை செயலாளர், சிபிஐ எஸ்.பி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
மேலும் இந்த வழக்கில் தமிழக நகராட்சி நிர்வாக துறை செயலாளர், சென்னை கோவை மாநகராட்சிகளின் ஆணையர்களை தானாக முன் வந்து எதிர் மனுதாரர்களாக சேர்த்த நீதிமன்றம், அவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வழக்கின் விசாரணை ஜனவரி 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.