தமிழகம்

வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் வாக்குறுதியை நிறைவேற்றி இருந்தால் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு தேவை இருக்காதே? - பாஜகவை திணற வைத்த தம்பிதுரை

செய்திப்பிரிவு

வாக்குறுதி அளித்தபடி கருப்பு பணத்தை மீட்டு இந்தியர்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்குகளில் பிரதமர் மோடி 15 லடசம் ரூபாய் டெபாசிட் செய்து இருந்தால் பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடே தேவைப்படாது என துணை சபாநாயகர் தம்பித்துரை மக்களவையில் தெரிவித்தார்.

உயர் சாதியினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. இந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கியது. இப்போது எஸ்சி, எஸ்டி, ஓபிசி உள்ளிட்ட பிரிவினருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. 50 சதவீதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.

எனவே, உயர் சாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டுமானால் அரசியல் சாசன சட்டத்தின் 15 மற்றும் 16-வது பிரிவில் திருத்தம் செய்ய வேண்டியது அவசியம். இதன்படி, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் அரசியல் சாசன (124-வது சட்டத் திருத்த) மசோதா 2019-ஐ மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.

அதாவது அரசியல் சாசன சட்டத்தின் 15 மற்றும் 16-வது பிரிவுகளின்படி சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்க முடியும். பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது. எனவே, இதில் திருத்தம் செய்வதற்காக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இதுதொடர்பான விவாதம் நேற்று நடைபெற்றபோது, அதிமுக நாடாளுமன்ற குழு தலைவரும், துணை சபாநாயகருமான தம்பித்துரை கலந்து கொண்டு பேசினார். அவர் கூறுகையில் ‘‘வெளிநாடு வங்கிகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கி கணக்கில் செலுத்துவதாக கடந்த தேர்தலின்போது பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். அதை நிறைவேற்றி இருந்தால் இந்தியாவில் ஏழைகளே இருக்க மாட்டார்கள். ஏழைகளே இல்லையென்றால் பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடும் தேவைப்படாது.

சமூக ரீதியாக மட்டுமே இடஒதுக்கீடு வழங்க அரசியல் சட்டம் வழிவகை செய்கிறது. பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடு வழங்க முடியாது. இந்த திட்டத்தை செயல்படுத்தினால் ஊழல் தான் அதிகரிக்கும். பொருளாதார ரீதியாக பின்தங்கியவர் என பணம் கொடுத்து சான்றிதழ் வாங்கும் சூழல் ஏற்படும்’’ என கூறினார். பின்னர் தம்பிதுரை வெளிநடப்பு செய்தார்.

SCROLL FOR NEXT