தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடர்பாக அமைச்சர்கள் சி.வி சண்முகம் மற்றும் ஜெயக்குமார் தெரிவித்த கருத்துகளுக்கு தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் தங்கள் அதிருப்தியை தெரிவிக்கும் வகையில் தீர்மானம் போட்டு முதல்வரிடம் அளித்துள்ளது.
கடந்த 20-ஆம் தேதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களை சந்தித்தபோது ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சை குறித்த சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். அதில் ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிப்பது குறித்து கூறியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த வாரம் விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை சிகிச்சைக்கு வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லாதது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அளித்த பதிலில் சந்தேகம் இருப்பதால் அவரது பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும் என பேட்டியளித்தார்.
இதை ஆதரித்து அமைச்சர் ஜெயக்குமார் “ராஜிவ் கொலையில் ஜெயின் கமிஷன் ஒருபக்கம் விசாரித்தாலும் சிபிஐ மறுபக்கம் விசாரித்ததுபோல் சிலபேரை கவனிக்கவேண்டிய விதத்தில் கவனித்தால்தான் உண்மையெல்லாம் வெளிவரும். இவர்களிடம் சும்மா கூப்பிட்டு ஒரு வாக்குமூலம் வாங்குவதால் உண்மை வராது. கூட்டிட்டு போய் போலீஸ் ட்ரீட்மெண்ட் கொடுக்கவேண்டும்” எனத் தெரிவித்தார்.
அமைச்சர்களே ஐஏஎஸ் அதிகாரிகள் குறித்து கருத்து தெரிவித்தது ஐஏஎஸ் அதிகரிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடர்பாக அமைச்சர்கள் சி.வி சண்முகம் மற்றும் ஜெயக்குமார் தெரிவித்த கருத்துகளுக்கு தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் கூடி தங்கள் அதிருப்தியை தெரிவிக்கும் வகையில் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
தீர்மானத்தின் மீது கையெழுத்திட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கத்தலைவர் டி.வி.சோமநாதன் அதை முதல்வரிடம் அளித்ததாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிடவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அந்த தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
ஐஏஎஸ் அதிகாரிகள் சங்க நிர்வாகக்குழு கூடி கடந்த 2-ம் தேதி அமைச்சர்கள் முதன்மைச் செயலர் அந்தஸ்த்தில் உள்ள சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் குறித்து தெரிவித்த கருத்தினால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை குறித்து விவாதித்தது.
அமைச்சர்கள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வெளிநாட்டு சிகிச்சைக்குறித்து சுகாதாரத்துறை செயலர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வெளிப்படையாக பொதுவெளியில் பேட்டி அளித்தது குறித்து ஆராய்ந்தது.
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தில் சுகாதாரத்துறைச் செயலர் ஆஜராகி அதில் அவருக்கு தெரிந்த தகவல்களை பதிவு செய்துள்ளார். அந்த கமிஷன், அளிக்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறது.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளை தீர்மானிப்பதில் சுகாதாரத்துறைச் செயலர் எவ்வகையிலும் பொறுப்பாக மாட்டார். ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதை முடிவு செய்வது மருத்துவர்களேயன்றி அதிகாரிகள் அல்ல. மேலும் துறைச்சார்ந்த அதிகாரிகள் அவர்களுக்கு மேலுள்ள அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் என்பதும் அறிந்ததே.
முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணை வெளிப்படையாக நடந்துவரும் நிலையில் அமைச்சரே பொதுவெளியில் இவ்வாறு பேசுவது அபாயகரமான விளைவை ஏற்படுத்தும். சட்டத்துறை அமைச்சரே அதிகாரிக்கு எதிராக கருத்து தெரிவித்திருப்பது சட்ட நடைமுறையை பாதிக்க வாய்ப்பு உள்ளது.
மீன்வளத்துறை அமைச்சர் பேட்டியில் ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிப்பவர்களை தேவைப்பட்டால் ‘போலீஸ் டெக்னிக்’ மூலம் விசாரிக்கவேண்டும் என கூறுவது ஆச்சர்யமளிக்கிறது. ஐஏஎஸ் அதிகாரிகள் இந்தியா முழுதும் ஒரு முகப்படுத்தப்பட்ட சட்டத்தின் கீழ் பணியாற்றுகிறார்கள். அவர்கள் பொதுவெளியில் அறிக்கை அளிக்க அனுமதிக்கப்படுவதில்லை.
பொதுவெளியில் பதிலளிக்க முடியாத நிலையில் பணியாற்றும் குடிமைப்பணி அதிகாரிகளுக்கு எதிராக அமைச்சர்கள் குற்றம்சாட்டுவது நியாயமற்ற செயல், அது அரசாங்கத்தின் நடத்தை விதிகளுக்கு மாறானது.
பொதுவெளியில் ஐஏஎஸ் அதிகாரிகளை அவதூறு செய்வது குடிமைப்பணி ஆற்றுவோரை சோர்வுறச்செய்யும் செயல் மட்டுமல்ல அவர்கள் தங்கள் கடமையை ஆற்றுவதை தடுக்கும் செயல். அமைச்சர்கள் விசாரணை ஆணையத்தில் உள்ள ஒரு விவகாரத்துடன் குடிமைப்பணி அதிகாரிகளை இணைத்து பொதுவெளியில் விமர்சனம் செய்வது சீர்குலைவை ஏற்படுத்தும் செயல் என்பதை நிர்வாகக்குழு கவலையுடன் பார்க்கிறது.
மேலும், முதலமைச்சர் இவ்விஷயத்தில் தலையிட்டு குடிமைப்பணி அதிகாரிகளுக்கு எதிராக அமைச்சர்கள் பொதுவெளியில் விமர்சிப்பதை தவிர்க்கவும் பதவிக்குரிய கண்ணியத்தை காக்கவும் அறிவுறுத்த கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.