தமிழகம்

ஆறுமுகசாமி ஆணையம் முன்பு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜர்

செய்திப்பிரிவு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் முன்பு, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜரானார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் எழுப்பப்பட்ட நிலையில், அதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம், ஜெயலலிதாவின் பணியாளர்கள், சசிகலா தரப்பினர், அப்போலோ மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோரிடம் விசாரணையை நடத்தியது. சமீபத்தில், தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடமும் தொடர் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதையடுத்து, இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடித்தது.

இந்நிலையில், பொங்கல் பண்டிகை விடுமுறைக்குப் பிறகு, இன்று (திங்கள்கிழமை) மீண்டும் விசாரணை ஆரம்பமானது. ஏற்கெனவே 3 முறை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பியும் பல்வேறு காரணங்களைக் கூறி அவர் ஆஜராகாமல் இருந்தார். இதையடுத்து, நான்காவதாக அனுப்பப்பட்ட சம்மன் அடிப்படையில் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆஜரானார். அவரிடம் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், சசிகலா தரப்பு வழக்கறிஞர், அப்போலோ நிர்வாகம் தரப்பு வழக்கறிஞர்கள் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுகாதாரத் துறை அமைச்சரிடம் ஆலோசனை மற்றும் பரிந்துரைகள் பெற்று தான் ஜெயலலிதாவுக்கு சிகிச்சைகள் நடைபெற்றதாக, அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் விசாரணை ஆணையம் முன்பு வாக்குமூலம் அளித்தனர். அதனால், மருத்துவர் பாலாஜி தலைமையில் அப்போது அமைக்கப்பட்டிருந்த 5 பேர் கொண்ட குழு என்ன மாதிரியான தகவல்களை அமைச்சருக்கு வழங்கியது, லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே என்ன மாதிரியான சிகிச்சைகளை வழங்கினார், ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச் செல்லாமல் இருந்ததற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கேள்வி எழுப்பப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆறுமுகசாமி ஆணையத்தில் மக்களவை துணை சபாநாயகர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் அடுத்தடுத்த நாட்களில் ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இருவருக்கும் ஏற்கெனவே சம்மன் அனுப்பப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT