தமிழகம்

ஐஎஸ்ஐஎஸ் பெயரில் இமெயில்; தமிழக அரசின் எல்காட் நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

செய்திப்பிரிவு

சோழிங்கநல்லூரில் உள்ள தமிழக அரசுக்கு சொந்தமான எல்காட் நிறுவனத்துக்கு இமெயில் மூலம் ஐஎஸ்ஐஎஸ் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை சோழிங்கநல்லூர் - மேடவாக்கம் பிரதான சாலையில் தமிழக அரசின் தொழில்நுட்ப நிறுவனமான எல்காட்  நிறுவனம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு எல்காட் நிறுவன நிர்வாகிகளின் இணையதள முகவரிக்கும், நிறுவன இணையதள முகவரிக்கும் ஒரு இமெயில் வந்துள்ளது.

அதில், ‘‘இன்னும் 7 மணி நேரத்தில் எல்காட் நிறுவனத்தில் குண்டு வெடிக்கும், நிறுவனத்தின் அனைத்து வாசல்களும் அடைக்கப்பட்டுள்ளது, எல்காட் நிறுவனத்தின் கீழ் செயல்படும் அனைத்து நிறுவனங்களும் குண்டு வைத்து தகர்க்கப்படும், முடிந்தால் உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள்” என்று கூறப்பட்டிருந்தது.

இதைப்பார்த்த நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்து உடனடியாக செம்மஞ்சேரி போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். எல்காட் நிறுவனத்துக்கு விரைந்து வந்த போலீஸார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

சுமார் 6 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில் சந்தேகப்படும் விதத்தில் எந்த பொருளும் சிக்கவில்லை. அதைத் தொடர்ந்து மிரட்டல் போலி என்பது தெரியவந்தது. ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தை சேர்ந்தவர் எனக்கூறிக்கொண்டு சையத் இப்ராகிம் என்பவரது பெயரில் மிரட்டல் இமெயில் அனுப்பப்பட்டிருந்தது. அந்த மெயிலின் ஐபி முகவரியை வைத்து மிரட்டல் விடுத்த நபரை சைபர் பிரிவு போலீஸார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT