தமிழகம்

எச்சரிக்கை.. சிசிடிவி கண்காணிக்கிறது: சென்னையில் புத்தாண்டு இரவில் விதிமீறலில் ஈடுபட்ட 401 வாகன ஓட்டிகள் லைசென்ஸ் ரத்து

செய்திப்பிரிவு

கண்காணிப்பு கேமரா பதிவின்மூலம் புத்தாண்டு இரவில் விதிமீறலில் ஈடுபட்ட 401 வாகன ஓட்டிகள் மீது லைசென்ஸ் ரத்து, பாஸ்போர்ட் போலீஸ் சான்றுமறுப்பு போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் முதல்முறையாக சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் டிச.31 அன்று புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபட்ட 401 பேர் மீது நேரடி தொடர்பில்லா போக்குவரத்து அமலாக்க (Contactless Traffic Enforcement) முறைப்படி சென்னை போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர்  ஏ.கே.விசுவநாதன் உத்தரவின் படி சென்னை மாநகரம் முழுவதும் வணிக வளாகங்கள், அங்காடிகள் மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்கள் நடமாடும் இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பது தொடர்பான “மூன்றாம் கண்” (Third Eye) என்னும்  சிசிடிவி விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் பயனாக சென்னை போக்குவரத்து பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட 31,802 கடைகளில் 15,345 இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தக்கூடிய வசதியுள்ளது என கண்டறியப்பட்டு, சென்னை போக்குவரத்து காவல்துறை முயற்சியில் சுமார் 10,000 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதன் பயனாக, சென்னையில் முக்கிய சாலைகளான ஈ.வே.ரா பெரியார் சாலை, டாக்டர். இராதாகிருஷ்ணன் சாலை, கத்தீட்ரல் சாலை, அண்ணா சாலை, கிழக்கு கடற்கரை சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஜி.எஸ்.டி. சாலை, 100 அடி சாலை, ராஜாஜி சாலை, வால்டாக்ஸ் சாலை, பேசின் பாலம் சாலை, 200 அடி சாலை போன்ற முக்கிய சாலைகளில் அமைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை பயன்படுத்தி டிச.31 அன்று இரவு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 401 நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் தாறுமாறாக வாகனம் ஓட்டுதல் (Rash Driving) -186 வழக்குகள்,  அதிக வேகமாக வாகனம் ஓட்டுதல் (Over Speed) -57 வழக்குகள், அதிக சத்தம் உள்ள சைலன்ஸர்களை உபயோகித்தது (Tampered Silencer) -16 வழக்குகள், மூன்று பேர் பயணம் செய்தது (Triple Riding)-141 வழக்குகள் உட்பட மொத்தம் 401 வழக்குகள் பதிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இவர்கள் மீது ஓட்டுநர் உரிமம் ரத்து, பாஸ்போர்ட் அனுமதி மறுப்பு மற்றும் வேலை வாய்ப்பில் காவல் துறை நன்னடத்தை சான்று மறுப்பு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.  சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்யும் பணி தொடர்ந்து வருகிறது.  மேலும் பல போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்படும். ”

இவ்வாறு போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT