தமிழகம்

குடியரசு தின விழாவில் வீர தீர செயல்களுக்கான அண்ணா, காந்தி பதக்கங்கள்: முதல்வர் பழனிசாமி வழங்கினார்

செய்திப்பிரிவு

சென்னை மெரினா காமராஜர் சாலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதற்குப் பிறகு  வீர தீர செயல்களுக்கான அண்ணா, காந்தி பதக்கங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

இந்தியாவின் 70-வது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் குடியரசு தின விழா நடைபெற்றது. முப்படை வீரர்கள் அணிவகுப்புடன் வருகை புரிந்த ஆளுநரை முதல்வர் கே.பழனிசாமி, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து முப்படை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளை ஆளுநருக்கு தலைமைச் செயலர் அறிமுகம் செய்து வைத்தார். அதன்பின், தேசியக் கொடியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினா. அந்த நேரம், விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் வானில் இருந்து பூக்களை தூவிச் சென்றன.

இதையடுத்து முப்படை வீரர்கள், தமிழக காவல் துறையினர், சிறை, தீயணைப்பு மற்றும் வனத் துறையினர், கல்லூரி, பள்ளிகளில் உள்ள தேசிய மாணவர் படையினர், நாட்டுநலப்பணித் திட்டம், சாரண, சாரணியர் இயக்கத்தினரின் அணிவகுப்பு நடைபெற்றது. அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.

அதன் பின்னர் வீர தீர செயல்களுக்கான பதக்கங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். சென்னை  சூர்யகுமார், தேனி  ரஞ்சித் குமார், தஞ்சை மாவட்டம்  ஸ்ரீதர் ஆகியோருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.  புதுக்கோட்டை விவசாயி சேவியருக்கு வேளாண்மைத்துறை சிறப்பு விருது வழங்கப்பட்டது.

மேலும், 5 காவலர்களுக்கு காந்தியடிகள் பதக்கங்களை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

இதைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் நடனம், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்களின் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவையொட்டி காலை முதல் அணிவகுப்பு முடியும்வரை மெரினா காமராஜர் சாலை பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT