விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் சார்பில் கஜா புயல் நிவாரணத்துக்கான நிதி முதல்வர் கே.பழனிசாமியிடம் நேற்று வழங்கப்பட்டது.
தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கஜா புயல் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. அப்பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றன. பல மாவட்டங்களில் இருந்தும் மாவட்ட நிர்வாகங்கள், தன்னார்வ அமைப்புகள், அரசுத்துறைகள் சார்பில் நிவாரணப் பொருட்கள் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், புயல் பாதிப்புகளுக்காக அதிக அளவில் நிவாரணத்தொகை, நிவாரணப் பொருட்கள் அளிக்க வேண்டும் என்று முதல்வர் கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலைலில் நேற்று மாலை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் பொதுச்செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் முதல்வர் கே.பழனிசாமியை சந்தித்தனர். அப்போது, முதல்வரிடம் புயல் நிவாரண நிதிக்காக ரூ.10 லட்சத்தை திருமாவளவன் வழங்கினார்.
முன்னதாக நேற்று காலை தலைமைச் செயலகத்தில் முதல்வர் கே.பழனிசாமியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருடன் சந்தித்த வேலம்மாள் அறக்கட்டளை தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம் ரூ.1 கோடிக்கான காசோலையை முதல்வர் நிவாரண நிதிக்காக வழங்கினர். தொடர்ந்து, மதுரை மாவட்ட அதிமுக சார்பில் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ ரூ.10 லட்சம், நடிகர் விவேக் ரூ.5 லட்சம் நிதி வழங்கினர்.
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவுடன் வந்த லெஜண்ட் சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் ரூ.1 கோடி, ராம்கோ குழும தலைவர் பி.ஆர்.வெங்கடராம ராஜா மற்றும் தலைமை செயல் அதிகாரி ஏ.வி. தர்ம கிருஷ்ணன் ஆகியோர் ரூ.1 கோடிக்கான நிதியை, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கினர்.