இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் விழா நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி சென்னையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்திருக்கும் அவருடைய இல்லத்தில் (கிரிஜா இல்லம்) ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. தமிழக கல்வி ஆராய்ச்சி வளர்ச்சிக் கழகம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆகியவை இதற்கு ஏற்பாடு செய்திருந்தன.
இந்நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ராதாகிருஷ்ணன் சிலைக்கு மாலை அணிவித்தார். பிர்லா கோளரங்கத்தின் தலைவர் ஐயம் பெருமாள், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குநர் ம.முரளி, தேசிய கப்பல் வாரிய உறுப்பினர் ஆர்.ராஜமோகன், தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் ரத்தினசபாபதி மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் பேசியதாவது, ''குழந்தைப் பருவத்தில் தொடங்கும் கற்கும் பழக்கம் இறப்பு வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நல்ல ஆசிரியர்கள் எதையும் எதிர்பார்க்காமல் மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பார்கள். ஒரு மனிதனை சுயநலம் இல்லாமல் மற்றவர்களுக்கு உதவும் உத்தம நிலைக்கு கொண்டு செல்பவர்கள் ஆசிரியர்கள் ஆவார். ஆசிரியர்களிடம் கற்றுக் கொண்டதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்'' என்றார்.
கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் ‘கற்க கற்பிக்க’ என்ற புத்தகத்தை நீதிபதி வெளியிட்டார் அதனுடைய முதல் பிரதியை ஸ்ரீகிருஷ்ண ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குநர் ம.முரளி பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் பல்வேறு பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை நூறு விழுக்காடு பெற உதவிய பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு ‘ஆசிரியர் செம்மல்' விருது வழங்கப்பட்டது. மொத்தம் 74 ஆசிரியர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.