நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் 18 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் விக்கிரகத்துக்குப் 11 அடி உயர நடைமேடை அமைத்து பூஜை செய்து கொண்டிருந்த அர்ச்சகர் வெங்கடேஷ் திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார், இவருக்கு வயது 53.
பக்தர் ஒருவர் அளித்த துளசி மாலையை விக்கிரகத்துக்கு அணிவித்துக் கொண்டிருந்த அர்ச்சகர் வெங்கடேஷ் நிலை தவறி மேலேயிருந்து தலைகுப்புற விழுந்ததில் தலையில் பலத்த அடி ஏற்பட்டுள்ளது, இதனையடுத்து அவர் சேலம் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு அங்கு அபாயக் கட்டத்தைத் தாண்டாத நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆஞ்சநேயர் கோயிலின் வரலாற்றில் இப்படியொரு துர்சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வெங்கடேஷ் தன் சகோதரர் நாகராஜனுக்கு உதவி அர்ச்சகராகப் பணியாற்றி வந்தார், கோயில் அர்ச்சகர் சம்பளப் பட்டியலில் இவர் பெயர் இல்லை.
இந்நிலையில் தனியார் மருத்துவமனை வட்டாரங்கள் அர்ச்சகர் வெங்கடேஷ் அபாயக் கட்ட்டத்தை தாண்டவில்லை என்று பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.
இவருக்கு தலையில் ரத்தக் கசிவு ஏற்பட ரத்தப்போக்கை நிறுத்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.