காஞ்சிபுரம் மாவட்டம், கேளம்பாக்கம் அடுத்த படூரில் உள்ள தனியார் கல்லூரியில் மாற்றுத்திறனாளிகள் தின விழா ‘தி ஹெட்மயர் அறக்கட்டளை' சார்பில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் தலைவர் ராகவி தலைமை தாங்கினார். இதில், சிறப்பு அழைப்பாளராக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
கல்லூரியில் அரசியல் பேசுகிறார் எனக் கூறுகின்றனர். கல்லூரியில்தான் எதிர்காலம் உள்ளது. அதனால், நான் கல்லூரியில் அரசியல் பேசுவேன். ஏனென்றால், கல்லூரியில்தான் இளமையும், நேர்மையும் உள்ளது.ஓட்டுக்கு பணம் அளிக்கும் கூட்டத்தை ஜெயிக்கப்போவது இப்படித்தான். எல்லோரும் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டேன்என உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள். ஓட்டுக்கு பணம் அளிக்கும் அரசியல்வாதிகளை வெல்வதற்கு நீங்கள்தான் உதவவேண்டும்.
ஏழைகளின் பையில் இருந்து எடுத்த பணத்தை மீண்டும் அவர்களுக்கு வழங்குகின்றனர். இதற்கு பெயர் தர்மம் அல்ல; திருட்டு. ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என்பதை அனைவருக்கும் புரியவையுங்கள். நீங்கள்தான் தமிழகத்தை செதுக்கும் சிற்பிகள். இங்கு நான் வித்திடுகிறேன். ஓட்டு உரிமை கட்டாயம் பெற வேண்டும். முழுமையான ஓட்டுரிமையை பெறுவதற்காக கல்லூரிகளுக்கு இடையே போட்டி ஏற்பட வேண்டும். இதில் வெல்பவர்களுக்கு, நான் தலையாய கடமைப்பட்டிருக்கிறேன்.
மாற்றுத்திறனாளிகளை கண்டு நாம் பெருமைப்பட வேண்டும். ஏனெனில், இருப்பதை கொண்டு சிறப்பாக தங்களது கடமையை செய்து வருகின்றனர். அவர்கள் தான் என்னை ஊக்குவிப்பவர்கள். இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து, மாற்றுத் திறனாளிகள் 5 பேருக்கு சக்கர நாற்காலி வழங்க காசோலையை வழங்கினார். முன்னதாக, மாற்றுத்திறனாளிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், கல்லூரியின் இயக்குநர் அசோக்குமார், நிர்வாகி வர்கீஸ், மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.