``மோடி அரசை அகற்ற நாடு முழுக்க மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டுள்ளது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.
திருநெல்வேலியில் கட்சியின் அலுவலகத்தில், 12 அடி உயர லெனின் சிலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த சிலையை திறந்து வைத்து அவர் பேசியதாவது:
ரஷ்ய புரட்சியையும் லெனினையும் புகழ்ந்து பாடிய பாரதி உள்ளிட்ட விடுதலைப் போராட்ட வீரர்கள் பிறந்த நெல்லையில், லெனின் சிலை திறக்கப் பட்டதன் மூலம், ஆளும் வர்க்கத்தை ஒழிக்க, பாட்டாளி வர்க்கம் வந்திருக்கிறது என்பதை உணர்த்தியிருக் கிறோம். திரிபுராவில் பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் அவரது சிலையை தகர்த்தன. சிலையை தகர்க்கலாம், ஆனால் அவரது சித்தாந்ததை தகர்க்க முடியாது. சுரண்டலற்ற சமுதாயம் அமைக்க லெனினின் கொள்கைகள் இப்போதும் தேவை.
பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவதால் மக்களின் வாழ்க்கை மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மாபெரும் ஊழல் மூலம் ஆளும் வர்க்கமும் கொள்ளை அடிக்கிறது. ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதலில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளது. சுரண்டலை ஒழிக்க மோடியை ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்ற மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் மதச்சார்பற்ற சக்திகளை சிதைக்கும் நோக்கத்தில் ஆர்எஸ்எஸ்ஸும் பாஜகவும் வன்முறைகளை முன்னெடுக்கிறார்கள். இப்போது நாட்டுக்கு தேவை மாற்று தலைவர்கள் அல்ல, மாற்று கொள்கைகள் தான். அது மக்கள் சார்ந்து இருக்க வேண்டும்.
தேர்தல் வரும்போது மோடி பல்வேறு வாக்குறுதிகளை அளிப்பார். கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அவரிடமிருந்து நாட்டையும் அதிமுகவிடமிருந்து தமிழகத்தையும் காப்பாற்ற வேண்டும் என்றார் அவர். விழாவில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்றார்.