தமிழகம்

ஜன.17-ல் எம்ஜிஆர் நினைவு வளைவு திறப்பு விழா நடத்தக்கூடாது: உயர் நீதிமன்றம்

செய்திப்பிரிவு

எம்ஜிஆர். நூற்றாண்டு நினைவு வளைவை திறக்க திறப்புவிழா நடத்தக்கூடாது. வளைவின் மேல் உள்ள திரைகளை மட்டும் அகற்றலாம் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

எம்ஜிஆர் நினைவு வளைவு சம்பந்தமான வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் நடந்து வருகிறது. நேற்று  மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதத்தில்  கட்டுமான பணிகள் முடிந்துவிட்டதாகவும்,  ஜனவரி 17-ல் எம்ஜிஆர் பிறந்தநாள் வருவதால் அன்று திறக்க உத்தேசித்துள்ளதாகவும், எம்ஜிஆரை பெருமைப்படுத்தவே கட்டப்பட்ட வளைவு இது என்றும், திறக்க விதித்த தடையை நீக்க வேண்டும். பிரமாண்ட விழாக்கள் எதுவும் நடக்காது, 5 நிமிட நிகழ்வு மட்டுமே என்று தெரிவித்தார்

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், எம்.ஜி.ஆர். பெருமைப்படுத்த வளைவு கட்டியதை தவிர வேறென்ன செய்தீர்கள்? ஆண்டு முழுவதும் நூற்றாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பேனர் வைத்தீர்கள். அவரின் கொள்கை, கருத்துக்களை பரப்ப என்ன செய்தீர்கள்? பார்வையற்றோர் காதுகேளாதோர் நலனுக்கு என்ன செய்தீர்கள்? அவர்களுக்கு பள்ளிகள் திறந்தீர்களா? அல்லது ஏற்கனவே உள்ள பள்ளிகளுக்கு வசதிகள் செய்து கொடுத்தீர்களா? இதுபோன்ற எந்த திட்டத்துக்காவது செயல்திட்டத்தை உருவாக்கிவிட்டு வாருங்கள்  அதுவரை திறக்க அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தனர்.

பின்னர் நீதிபதிகள் மனுதாரரிடம் அந்த வளைவைப் பார்த்தால் எம்.ஜி.ஆர் பற்றிய நல்ல நினைவுகள் வருமென அரசு நினைப்பதில் என்ன தவறிருக்கிறது கேள்வி எழுப்பினர்.

அண்ணா நினைவாக நூலகம் கட்டியுள்ளார்கள். அதுபோல கட்டலாம். கல்வி, அறிவுத்திறன் வளர்ச்சிக்கு செலவிடலாம் என மனுதாரர் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள் சிவாஜி நினைவாக மணிமண்டபம் கட்டினார்கள். அதில் யார்? என்ன? பலனடைகிறார்கள்? அதுகூட நீர்நீலை இடத்தில் தான் கட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு வளைவை திறக்க,  திறப்புவிழா நடத்தக்கூடாது. வளைவின் மேல் உள்ள திரைகளை மட்டும் அகற்றலாம் என உத்தரவிட்ட அமர்வு, வழக்கை பிப்ரவரி 5-க்கு ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT