தமிழகம்

ரயில்களின் நேரத்தை தெரிந்துகொள்ள வசதியாக 9 ரயில் நிலையங்களில் மின்னணு தகவல் பலகைகள் பொருத்தும் பணி தொடக்கம்

செய்திப்பிரிவு

பெரம்பூர், திருவள்ளூர் உட்பட 9 ரயில் நிலையங்களில் மின்னணு தகவல் பலகைகளைப் பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ரயில்களின் புறப்பாடு, வருகை குறித்த தகவல்களை பயணிகள் எளிதில் அறிந்து கொள்ள முடியும்.

தெற்கு ரயில்வேயில் சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட ரயில் நிலையங்க ளில் தற்போது போதிய வசதிகள் இல்லை. குறிப்பாக, எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் பெரம்பூர், திருவள்ளூர், வாலாஜா ரோடு ஆகிய ரயில் நிலையங்களில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வந்து செல்லும் நேரம் குறித்த அறிவிப்பு பலகைகள் வைக்கப்படாமல் உள்ளது. அத்துடன், ரயில் பெட்டிகளின் எண்கள் குறித்த அறிவிப்பு பலகைகளும் இல்லை. இதனால், பயணிகள் தாங்கள் முன்பதிவு செய்த பெட்டி களை கண்டுபிடிக்க சிரமப்பட்டு வருகின்றனர்.

இதுபோன்ற பயணிகளின் சிரமங்களை போக்குவதற்காக ஒன்பது ரயில் நிலையங்களில் மின்னணு தகவல் பலகைகளைப் பொருத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அன்னை இன்பர்மேஷன் நிறுவனத்தின் இன்சுலேஷன் செந்தில் குமார் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

பெரம்பூர், திருவள்ளூர், பேசின்பிரிட்ஜ், சோளிங்கர், வாணியம்பாடி, வாலாஜாபாத் ரோடு, கும்மிடிப் பூண்டி, சூலூர்பேட்டை மற்றும் திண்டி வனம் ஆகிய ரயில் நிலையங் களில் மின்னணு தகவல் பலகைகள் பொருத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதில், பெரம்பூர், திருவள்ளூர், சூலூர்பேட்டை மற்றும் வாலாஜாபாத் ரோடு ஆகிய நான்கு ரயில் நிலையங்களில் இப்பணி நிறைவடைந்துள்ளது. மற்ற ரயில் நிலையங்களில் டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது.இதன் மூலம், ரயில்களின் வருகை, புறப்பாடு குறித்த விவரங்களை பயணிகள் தாங்களாகவே பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.

SCROLL FOR NEXT