பள்ளிகளில் தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்துவது அவசியமானது என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.
தாழ்த்தப்பட்ட மக்களைப் பொருளாதாரச் சுரண்டல்களிலிருந்து பாதுகாக்கவும், அவர்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்கவும், அவர்கள் மீதான வன்முறைகள் குறித்து சுயேச்சையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவும், அந்த மக்களின் சமூகம், கல்வி, பொருளாதாரம் மற்றும் கலாச்சார, பண்பாடு மற்றும் குடியுரிமைகளைப் பாதுகாக்கவும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் செயல்பட்டு வருகிறது. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் துணைத் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த முருகன் பணியாற்றி வருகிறார்.
‘இந்து தமிழ் திசை’ இணையதளம் சார்பாக அவரைச் சந்தித்தோம். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் செயல்பாடுகள், தாழ்த்தப்பட்டோர் நிலைமை, தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் எதிர்கொண்டு வரும் சவால்கள் என பல்வேறு விஷயங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் செயல்பாடுகள் பற்றி?
நாடு முழுவதும் கழிவு நீர் தொட்டியைச் சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் மரணமடையும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன. குறிப்பாக தலைநகர் டெல்லியில் கழிவு நீர் தொட்டியைச் சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் அடுத்தடுத்து மரணம் அடையும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இந்தப் பிரச்சினையைத் தீர்க்க மாவட்ட வாரியாகக் கூட்டங்களை நடத்தினோம். இதுதொடர்பான புகார்கள் வந்தால் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று நடவடிக்கையைத் தொடங்கினோம். டெல்லியைப் பொறுத்தவரையில் இதுபோன்ற 13 வழக்குகளை தாழ்த்தப்பட்டோர் ஆணையமே தானாக முன் வந்து பதிவு செய்து நடவடிக்கை எடுத்தது.
தமிழகத்திலும் தாழ்த்தப்பட்டோர் ஆணையம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தின்போதும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் சார்பில் சம்பவ இடத்துக்கு உடனடியாகச் சென்று விசாரணை நடத்தினோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு 15 லட்சம் ரூபாய் இழப்பீடு கிடைக்கவும், நிவாரணம் உதவிகள் கிடைக்கவும் நடவடிக்கை எடுத்தோம்.
நாமக்கல் மாவட்டம் பில்லூர் கிராமத்தில் அறநிலையத்துறை கோயிலில் தாழ்த்தப்பட்ட மக்கள் திருமணங்களை நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. நாங்கள் தலையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளோம். தற்போது அங்கு தாழ்த்தப்பட்ட மக்கள் திருமணங்களை நடத்திக் கொள்ள முடிகிறது. மதுரை மருதங்குடியில் இரட்டைக் குவளை கொடுமை இருப்பதாக தகவல் அறிந்து நாங்கள் தலையிட்டுத் தடுத்துள்ளோம்.
ஆனால், இதுபோன்ற விஷயங்களில் ஆணையம் அல்லது அரசு நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுத்தாலும் அடுத்த சில மாதங்களில் பழைய நிலை திரும்பி விடுவதாகக் கூறப்படுகிறதே?
இதற்காக தான் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி இதுபோன்ற கொடுமைகள் நடக்கும் கிராமங்களை வன்கொடுமை நடைபெறும் பகுதிகளாக அறிவித்து அங்கு சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அங்கு நிரந்தரமாக போலீஸ் கண்காணிக்கவும் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. இதனால் வன்கொடுமைகளை நிரந்தரமாக நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தமிழகத்தில் முன் முயற்சி எடுத்த மாற்றமாக எதைக் கருதுகிறீர்கள்?
தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு உள்ளபோதிலும், அதனை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக கிராமப்புறங்களில் அரசுப் பள்ளிகளில் 18 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுகிறது. ஆனால் அது ஒட்டுமொத்தாக கணக்கிட்டு அளிக்கப்படுகிறது. குறிப்பாக 11-ம் வகுப்பில் 18 சதவீத இட ஒதுக்கீடு என்பது ஒவ்வாரு பாடப்பிரிவுக்கும் கிடைப்பதில்லை.
எடுத்துக்காட்டாக, ஒரு பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் மாணவர்களைச் சேர்க்கும்போது, மொத்தம் 300 மாணவர்கள் சேர்க்கப்பட்டால் அதில் 18 சதவீதம் இட ஒதுக்கீடு கணக்கிட்டு வழங்கப்படுகிறது. 200 மாணவர்கள் என்றால் அதில் நான்கு பாட்டப்பிரிவுகள் இருக்கும் ‘ஏ’ குரூப் எனப்படும் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் அடங்கிய பிரிவு, மருத்துவக் கல்லூரிக்கு செல்லும் வாய்ப்புள்ள அறிவியல் பாடங்கள் ‘பி’ குரூப், வரலாறு பிரிவு , வணிகவியல் பிரிவு என நான்கு பாடங்களில் தலா 50 மாணவர்கள் சேர்க்கப்படுவர்.
தமிழகப் பள்ளிகளில் சில தலையீடுகள் காரணமாக உயர் கல்வியில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்குச் செல்ல வாய்ப்பு இல்லாத வரலாறு மற்றும் கணிதவியல் பாடப்பிரிவுகளிலேயே தாழ்த்தப்பட்ட மாணவர்களைச் சேர்த்து விடுகின்றனர். தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தலையிட்டு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்தது. ஒட்டுமொத்தமாக இட ஒதுக்கீடு வழங்காமல் ஒவ்வொரு பாடப்பிரிவு வாரியாக இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் முயற்சி மேற்கொண்டது. இதன் பயனாக தற்போது பிளஸ் 1 மாணவர் சேர்க்கையில் தமிழகப் பள்ளிகளில் பாடப்பிரிவுகள் வாரியாக 18 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.
எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் மத்திய அரசு செய்துள்ள திருத்தம் பற்றிய விமர்சனங்கள் உள்ளதே?
எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் அந்த சமூக மக்களைப் பாதுகாக்கும் வகையில் உள்ளது. அதன்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், அவர்களுக்கு வீடு, குழந்தைகளுக்கு உண்டு உறைவிடப் பள்ளியில் தங்க வைத்துப் படிக்க வைக்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, பென்ஷன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல பிரிவுகள் கொண்டு வரப்பட்டன. இவை அனைத்தும் தாழ்த்தப்பட்ட மக்களைப் பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளன. இவை அனைத்தும் இந்தச் சட்டம் திருத்தப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்.
தாழ்த்தப்பட்ட மக்கள் பாதிக்கப்படும் சம்பவங்களில் அந்த மக்களுக்கு நீதி கிடைக்கிறதா?
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்களில் வழக்குகள் முறையாக நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது மிகக் குறைவாகவே உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் வழக்குக்காகப் போராடுவது, அரசு இயந்திரம் சரியான முறையில் இயங்குவது, சாட்சிகளுக்குப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நீதி கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. எனினும் இதனை அமல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் தடையாக உள்ளன.
தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் வேறு சில பிரச்சினைகள் என்ன?
தமிழகத்தில் சுமார் 12 லட்சம் பஞ்சமி நிலங்கள் இருப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டு, அந்த மக்களிடம் இல்லாத நிலையே உள்ளது. தமிழகத்தில் 1.86 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலத்தை மட்டுமே தமிழக அரசு அடையாளம் கண்டுள்ளது.
பஞ்சமி நிலங்கள் அனைத்தும் தாழ்த்தப்பட்ட மக்கள் வீடுகட்டிக்கொள்ளவும், விவசாயம் செய்யவும், வர்த்தக ரீதியாகப் பயன்படுத்திக் கொள்ளவும் பயன்பட வேண்டும். தமிழகத்தில் மாவட்டம் வாரியாக பஞ்சமி நிலம் குறித்த விவரங்களை அளிக்குமாறு அந்தந்த மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கோரியுள்ளோம். அடையாளம் காணப்பட்ட நிலங்கள் எவ்வளவு, ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் எவ்வளவு, ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலம் எவ்வளவு போன்ற விவரங்களைக் கேட்டுள்ளோம்.
எஸ்சி, எஸ்டி நல நிதியைப் பொறுத்தவரை பெருமளவு அந்த நிதி வேறு திட்டங்களுக்குத் திருப்பிவிடும் நிலையே உள்ளது. பல மாநிலங்களிலும் பல ஆண்டுகளாக இந்த நிலை உள்ளது. கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் இந்த நிதி மாவட்டம் வாரியாக பிரித்தளிக்கப்பட்டு பின்னர் வட்டம் வாரியாக திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால் தமிழகத்தில் மாவட்டம் வாரியாக நிதி பிரித்தளிக்கப்படாமல், மாநில அளவில் அரேச குறிப்பிட்ட துறைக்கு நிதியை ஒதுக்கீடு செய்து விடுகிறது. இதனால் மாவட்டம் வாரியாக எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்பட்டது, பயனாளிகள் யார் போன்ற விவரங்கள் இல்லை.
தாழ்த்தப்பட்டோருக்காக மத்திய அரசு வேறு என்ன திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது?
தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அரசு திட்டங்கள் மட்டுமின்றி தொழில் முனைவோராக்குவதற்கான திட்டங்களையும் செயல்படுத்துகிறது. சிறு மற்றும் குறுந்தொழில் மேம்பாட்டு நிறுவனம் மூலம் எஸ்சி, எஸ்டி ‘ஹப்’ எனப்படும் தொழில்முனைவோர் மையங்கள் உருவாக்கப்படுகின்றன. இதற்காக ரூ.490 கோடியில் திட்டங்கள் செயல்படுத்துப்படுகின்றன.
நலத்திட்டங்கள் மட்டுமின்றி அம்பேத்கரின் நினைவைப் போற்றும் வகையில் பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. லண்டனில் அவர் வாழ்ந்த வீடு, தீட்சா பூமி, மகாராஷ்டிராவில் இந்து மில் வீடு, பனராஸ் ரவிதாஸ் பீடம் போன்றவற்றை நினைவு இல்லமாக மத்திய அரசு மாற்றியுள்ளது. இதற்காக ரூ.400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தாழ்த்தப்பட்டோருக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செய்து வருவதாக கூறுகிறீகள். ஆனால் பாஜக ஆட்சியில் தான் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் வைக்கும் வாதம் பற்றி?
தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாகக் கூறுவது தவறான வாதம். புள்ளி விவரங்களைப் பார்க்காமல் அரசியலுக்காக இதனைக் கூறுகிறார்கள். ஆனால், உண்மையிலேயே தற்போதைய மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கையால் தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதல்கள் குறைந்து வருகின்றன.
இறந்த பசுவின் தோலை உரித்தாகவும், பசுவின் இறைச்சியை சாப்பிட்டதாகவும் கூறி தாழ்த்தப்பட்டோர் மீது தாக்குதல் நடக்கிறதே?
உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இந்த சம்பவங்கள் நடந்ததாகக் கூறி தவறான பிரசாரம் செய்யப்படுகிறது. ஆனால் உத்தரப் பிரதேசத்தில் தலித் மக்கள் மாட்டுக்கறி சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள் அல்ல. பிறகு எப்படி மாட்டுக்கறி சாப்பிட்டதற்காக அவர்கள் மீது தாக்குதல் நடந்திருக்க முடியும். புள்ளி விவரங்களின்படி உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களை விடவும், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகம் நடந்துள்ளன.
தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் தற்போதைய நிலைமை குறித்து?
வேறு சில மாநிலங்களை ஒப்பிட்டால் தாழ்த்தப்பட்டோர் தமிழகத்தைப் பொறுத்தவரை 10-ம் வகுப்பு வரை கல்வி பெறுகின்றனர். ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்து ஒரளவு பொருளாதார வசதி பெற்றுள்ளனர். ஆனால் இதுபோதுமானதல்ல. உயர் கல்வியில் இனிமேல் கவனம் செலுத்த வேண்டும். அதுபோலவே தொழில் முனைவோராக மாற முயல வேண்டும். அதற்கான பல அரசு திட்டங்கள் உள்ளன. அதனைப் பயன்படுத்தி பொருளாதார ஏற்றம் பெற வேண்டும்.
அப்படியானால் தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் மேம்பட திராவிட இயக்கங்கள் உதவியதாகக் கூறலாமா?
அது எப்படி கூற முடியும். அது உண்மை என்றால் நாட்டிலேயே தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் அதிக மேம்பாடு அடைந்ததாக இருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லையே. பஞ்சாப் மாநிலத்தில் மக்கள் தொகையில் 32 சதவீதமாக உள்ள தாழ்த்தப்பட்டோர் பெரும் தொழில் முனைவோராக உள்ளனர். பொருளாதார வலிமை பெற்றவர்களாக உள்ளனர்.
சமூக, அரசியல் தளத்தில் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள முடிகிறது. அந்த நிலைமை இங்கு இல்லையே. ஹரியாணாவில் அதிகஅளவு சாதி மறுப்பு திருமணங்கள் சகஜமாக நடக்கின்றன. குஜராத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் சர்வசாதாரணமாக தொழில் செய்ய முடிகிறது.
ஆனால் தமிழகத்தில் என்ன நிலைமை? நாடு சுதந்திரமடைந்தது முதல் மத்திய, மாநில அரசுகள் தாழ்த்தப்பட்டோருக்காக பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. இதன் மூலம், தமிழகத்தில் கல்வி அறிவு பெற்று தாழ்த்தப்பட்ட மக்கள் சுய முயற்சியுடன் முன்னேறி வருகின்றனர். இவர்கள் அடுத்தகட்டத்தை நோக்கி நகர வேண்டும் என்பது தான் எனது எண்ணம். தேசியக் கண்ணோட்டமும், அனைத்து சமூகங்களையும் அரவணைத்துச் செல்லுதலுமே அவசியம் என எண்ணுகிறேன்.
உயர் சாதியினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு குறித்து?
வரவேற்கக்கூடியது. பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் கன்ஷிராம் இதனைப் பேசி வந்தார். மத்திய அரசு தற்போது இதனை அமல்படுத்தியுள்ள நிலையில், பாஜக கூட்டணியில் உள்ள ராம்தாஸ் அத்வாலே மட்டுமின்றி மாயாவதி போன்றோரும் வரவேற்கின்றனர். ஒட்டுமொத்த சமூகத்திலும் சமநிலை வர வேண்டும் என்று தான் அம்பேத்கரும் கூறியுள்ளார்.
சமூக நீதி என்பது அனைத்து சமூகத்தையும் உள்ளடக்கியது தான். எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் பின் தங்கியவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
தேவேந்திர குல வேளாளர்களை ஒரே சமூகமாக அங்கீகரிக்க வேண்டும், அடையாளத்தை மீட்டெடுக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்துகிறாரே?
தேவேந்திர குல வேளாளர்களின் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அவர்களின் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசியுள்ளனர். கோரிக்கை குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையுமும் நடவடிக்கை எடுத்துள்ளது. கோரிக்கையை ஆய்வு செய்து மாநில அரசு பரிந்துரை அளிக்க வேண்டும். இதனை ஏற்று மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசிடம் இருந்து பரிந்துரை வந்த பிறகு இந்த விவகாரத்தில் மததிய அரசு நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு முருகன் பேட்டி அளித்தார்.