தமிழகம்

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது: சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய காளையர்

ஏஎன்ஐ

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மதுரை அவனியாபுரத்தில் இன்று கோலாகலமாகத் தொடங்கியது. சீறிப்பாய்ந்த காளைகளை, இளம் காளையர் அடக்கி பரிசுகளை அள்ளிச் சென்றனர்.

தமிழர் திருநாளான தைத்திருநாளில் பாரம்பரியமாக ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழா இன்று தொடங்கியது.

அவனியாபுரத்தில் ஜல்லிகட்டுப் போட்டியை யார் பொறுப்பு ஏற்று நடத்து வது, முதல் மரியாதை யாருக்கு அளிப்பது என்பதில் ஏற்பட்ட பிரச்சினையில் உயர் நீதிமன்றம் தலையிட்டது. இதனால், அவனி யாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி யை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ராகவன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு போட்டியைக் காலை 8 மணிக்கு மாவட்ட ஆட்சியர் நடராஜன் கொடிசைத்து தொடங்கி வைத்தார். ஒரு மணி நேரத்திற்கு 75 வீரர்கள் வீதம் சுழற்சி முறையில் வீரர்கள் களமிறக்கப்பட்டு வருகின்றனர். சீறிவரும் காளைகளை அடக்கிய இளம் காளையருக்கு பரிசுகளும், வீரர்களின் பிடிபடாமல் தன் வீரத்தை பறைசாற்றிய காளைக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஜல்லிக்கட்டு விழாவில் 500 மாடுபிடி வீரர்களும், 691 காளைகளும் பங்கேற்றுள்ளன. மாவட்ட நிர்வாகம் சார்பில் மாடுபிடி வீரர்களுக்கு மாநகராட்சி சுகாதார துறையினர் மருத்துவ சோதனையுடன், காப்பீடு வசதியும் செய்யப்பட்டுள்ளது.

கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. காயமடையும் மாடுபிடி வீரர்களின் வசதிக்காக மருத்துவர் ஆனந்த் தலைமையில் 10 மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்க்கும் வண்ணம் பெரிய அளவிலான திரைகள் 10 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. வாடிவாசல், பார்வையாளர் கேலரி உள்ளிட்ட பகுதிகளில் 10 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

மதுரை மாநகர காவல் ஆணையர் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாடுபிடி வீரர்களுக்கு முதல் முறையாக ரூ.2 லட்சத்துக்கு அரசு சார்பில் மருத்துவக் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT