பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மோடி, ‘பொய்யான தகவல்களையே தொடர்ந்து கூறிவரும் ஒரு பொய்யர்’ என்று தமிழ்நாடு காங் கிரஸ் கட்சித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் கூறியுள்ளார்.
இதுகுறித்து வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:
நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளர் என்பதையே மறந்துவிட்டு நாலாந்தர பேச்சாளர் போல் பேசி வருகிறார். தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகளான இலங்கைத் தமிழர் பிரச்சினை, மீனவர் பிரச்சினை இவைகளைப் பற்றி தேர்தல் அறிக்கையில் ஒரு வரி கூட பாஜக குறிப்பிடவில்லை. ஆனால் தமிழக பிரச்சாரக் கூட்டங்களில் மீனவர் நலன், இலங்கைத் தமிழர் நலன் காப்போம் என்கிறார்.
வாக்காளர்களுக்கு காங்கிரசார் இலவசப் பொருட்கள் வழங்குவதாகக் கூறியுள்ளார். அதை நிரூபிக்க வேண்டும். இல்லையெனில் அவர் மீது வழக்குத் தொடருவோம். குஜராத்தின் வளர்ச்சி என்பது ஒரு மாயை. அதை மறைத்து மீண்டும் மீண்டும் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறார்.
‘உப்புச் சத்தியாகிரகத்திற்கு தலைமையேற்றவர் வ.உ.சி.’ என்று இந்த தேசத்தின் வரலாறே தெரியாமல் பேசுபவர் இந்த நாட்டை எப்படி ஆள முடியும்?
இவ்வாறு அறிக்கையில் ஞானதேசிகன் கூறியுள்ளார்.