தமிழகம்

சபரிமலை பிரச்சினை;  கேரள முதல்வர் பினராயி விஜயனுக்குத் துணை நிற்போம்: திருமாவளவன்

செய்திப்பிரிவு

சபரிமலை பிரச்சினையில் உச்சநீதிமன்ற உத்தரவை அமல் படுத்தும் மாநில அரசுக்கு எதிராகவும், உண்மை நிலையை மறைத்து வன்முறையை தூண்டிவிடும் சக்திகள் பினராயி விஜயன் குறித்து அவதூறு பரப்புவதாக திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை தலைவர் திருமாவளவன் அறிக்கை:

சபரிமலையில் வழிபட அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பாகும். அந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டிய கடமை கேரள மாநில அரசுக்கு இருக்கிறது. தற்போது வழிபாடு செய்துள்ள இரண்டு பெண்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
நிர்வாகிகளோ அல்லது கேரள அரசின் தூதுவர்களோ அல்ல, அவர்களும் பக்தர்கள் தான்.

 அவர்கள் வழிபடச் சென்றபோது ஆண் பக்தர்கள் உறுதுணையாக இருந்து அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், இந்தப் பிரச்சனையை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் பாஜக , ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சனாதன அமைப்புகள் வன்முறையில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை ஏற்படுத்தி வருகின்றனர்.

கேரள மாநிலத்தின் ஆளுநராக இருப்பவர் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவார். அவர் இப்போது மாநில அரசிடம் அறிக்கை கேட்டிருப்பதாகத் தெரிகிறது. உச்சநீதிமன்ற
தீர்ப்பை செயல்படுத்தவிடாமல் தடுக்கும் சனாதன சக்திகள் யார் என்பதையும் அந்த சக்திகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்பதையும் அவர் மத்திய அரசிடம் எடுத்துக் கூறுவார் என்று நம்புகிறோம்.

சபரிமலை பிரச்சனையை முன்வைத்து தமிழ்நாட்டில் கல்வீச்சிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக்கம்பங்களை வெட்டுவதிலும் சனாதன தீவிரவாதிகள்
ஈடுப்பட்டுள்ளனர். அவர்களைப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.” 

இவ்வாறு திருமாவளவன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT