''சங்கம் முக்கியமா? சாப்பாடு முக்கியமா?'' என்ற கேள்விக்கு, ''சாப்பாடுதான் முக்கியம்.. அப்ப எனக்கு பசிக்கும்ல சாப்பிடக்கூடாதா?'' என்று தனது மழலை மொழியில் அழுகை கலந்து பேசி டிக் டாக் வாயிலாக பிரபலமான சிறுவன் குறித்த விவரம் தெரியவந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அந்தச் சிறுவனின் பெயர் பிரணவ். இவரது தந்தை ஃப்ரெட்டி, தாய் நிம்மி. இவருக்கு 4 வயதாகிறது. வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்.கே.ஜி., படிக்கிறார்.
சிறுவனின் மாமா முறைக்காரர் ஒருவர் புனித சேவியர் பாய்ஸ் என்ற சங்கத்தில் இருக்கிறார். அவரே சிறுவனை சங்கத்தில் சேர்த்திருப்பதாக சீண்டிப் பார்த்திருக்கிறார்.
விளையாட்டுச் சீண்டலுக்கு யதார்த்தமாகப் பதில் சொல்லப்போய் சமூக வலைதளங்களில் ஸ்டார் ஆகியிருக்கிறார் பிரணவ்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த பிரணவின் தாய் நிம்மி, தன் மகன் ஃபேமஸ் ஆகியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மழலை மொழியை சமூக வலைதளங்களில் கேட்டாலும்கூட குழலைவிட யாழைவிட இனியதுதான். சில மாதங்களுக்கு முன்னதாக சேட்டை பண்ணா திட்டாம அடிக்காம குணமா வாய்ல சொல்லச் சொன்ன திருப்பூர் பாப்பாவை யாரும் மறந்திருக்க இயலாது. அந்த வரிசையில் லேட்டஸ்ட்டாக இணைந்திருக்கிறார் பிரணவ்.
பிரணவை வைத்தும் நிறைய மீம்ஸ்கள், டிக் டாக் வீடியோக்கள் உருவாகிவிட்டன.