காந்தி நினைவு நாளையொட்டி நாளை தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
குமரி மாவட்டம் விளவங்கோடு சேர்ந்த ரதீஷ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அதில், "குமரி மாவட்டம், புதுக்கடையில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையின் அருகே பள்ளி, மருத்துவமனை, கோயில் அமைத்துள்ளது. இதனால் அங்கு செல்லும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது.
இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு, இதுதொடர்பாக நீதிமன்றம் தானாக முன்வந்து தமிழக மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவு உள்துறை செயலரைச் சேர்த்து, நாளை காந்தி நினைவு நாள் என்பதால் நாளை ஒரு நாள் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டனர்.
மனு தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.