வாகன கடனை முழுமையாக திருப்பிச் செலுத்திய பிறகும் வாடிக்கையாளருக்கு அசல் வாகன பதிவு சான்றை அளிக்காமல் இழுத்தடிப்பு செய்து வந்த நிதி நிறுவனத்துக்கு ரூ.10,000 அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த எண்.4 வீரபாண்டியைச் சேர்ந்த எம்.வித்யா மாவட்ட நுகர்வோர் குறைதீர்மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு வாகன விற்பனை நிலையத்தில் இருந்து இருசக்கர வாகனத்தை, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள நிதி நிறுவன உதவியுடன் வாங்கினேன். பின்னர், தவணைத் தொகையை முழுமையாக திருப்பிச் செலுத்தியதை அடுத்து அசல் வாகன பதிவுச் சான்று (ஆர்.சி), வாகனத்தின் சாவி ஆகியவற்றை பெறுவதற்காக வாகன விற்பனை நிலையத்தை அணுகினேன். ஆனால், அவற்றையெல்லாம் ஒப்படைக்க ரூ.8 ஆயிரம் செலுத்த வேண்டும் என அவர்கள் தெரிவித்தது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, நான் தவணைத் தொகையை செலுத்திய கணக்கு விவரங்களை அளிக்குமாறு தெரிவித்தேன். அதையும் அவர்கள் அளிக்கவில்லை. பின்னர், நிதி நிறுவனத்தை அணுகினேன். அவர்களும் உரிய பதில் அளிக்கவில்லை. எனவே, கடன் தவணைகள் இல்லை என்பதற்காக சான்று, அசல் வாகன பதிவுச் சான்று, வாகனத்தின் சாவி ஆகியவற்றை அளிக்கவும், இழப்பீடாக ரூ.75 ஆயிரம் அளிக்கவும் வாகன விற்பனை நிறுவனம், நிதி நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர்மன்றத்தின் தலைவர் ஏ.பி.பாலசந்திரன், உறுப்பினர்கள் சி.அமுதம், ஆர்.டி.பிரபாகர் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: ஆதாரங்கள் மூலம் தவணைத்தொகையை மனுதாரர் முழுமையாக திருப்பிச் செலுத்தியுள்ளார் என்பது நிரூபணமாகிறது. அவ்வாறு, கடன் தொகையை முழுமையாக செலுத்திய பிறகும், முறையாக அசல் வாகன பதிவுச் சான்று, வாகனத்தின் சாவி ஆகியவற்றை மனுதாரரிடம் ஒப்படைக்கத் தவறியது வாகன விற்பனை நிறுவனம், நிதி நிறுவனம் ஆகியவற்றின் சேவைக் குறைபாடாகும். எனவே, மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரத்தை 9 சதவீத வட்டியுடன் நிதி நிறுவனம், வாகன விற்பனம் ஆகியவை இணைந்து வழங்க வேண்டும். அதோடு, அசல் வாகன பதிவுச் சான்று, வாகனத்தின் சாவி ஆகியவற்றை திரும்ப ஒப்படைக்க வேண்டும், வழக்குச் செலவாக ரூ.3 ஆயிரம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் உத்தரவிட்டனர்.