முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் பெறப்பட்ட முதலீடுகள் நடைமுறைக்கு வரும்போது, தமிழகத்தின் பொருளாதாரம் அடுத்த நிலைக்கு உயரும் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சர் எம்.சி,சம்பத் பேசும்போது, ‘‘இந்த முதலீட்டாளர்கள் மாநாடு பெரும் வெற்றியை பெற்றுள்ளது. ஒவ்வொரு ஒப்பந்தமும் செயல்பாட்டுக்கு வரும்போது, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதன்மூலம், தனிநபர் வருவாய் அதிகரிக்கும். இந்த மாநாடு மூலம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் முதலீட்டை பெறுகின்றன. குறிப்பாக தெற்கு, மேற்கு, மத்திய பகுதிகளில் உள்ள மாவட்டங்கள் குறிப்பிடத்தக்க அளவு முதலீடுகளை பெற்றுள்ளன. இந்த முதலீடுகள் மூலம் தமிழகத்தின் பொருளாதாரம் அடுத்த நிலைக்கு உயரும்’’ என்றார்.
ஹூண்டாய் நிறுவன நிர்வாக இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்கிம் பேசும்போது, ‘‘கடந்த 23 ஆண்டுகளாக தமிழகத்தில் ஹூண்டாய் செயல்பட்டு வருகிறது. இந்த மாநாட்டில், மின்சார கார்கள் உற்பத்திக்காக கூடுதலாக ரூ.7 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளோம். இந்தியாவில், தமிழகத்தில் மட்டும்தான் ஹூண்டாய் மின்சார கார்களை தயாரிக்கிறது. இதனுடன் சேர்த்து இதுவரை ரூ.34 ஆயிரம் கோடியை ஹூண்டாய் முதலீடு செய்துள்ளது. ஒன்றரை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. சென்னையில் தயாராகும் கார்கள், 88 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் பட்டுள்ளன’’என்றார்.