டாஸ்மாக் வாசலில் நின்றிருந்த இளைஞர்களை மிரட்டி பீர் வாங்கித் தா அல்லது மோட்டார் சைக்கிள் சாவியைக் கொடு என்று சாவியைப் பிடுங்கி மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்ற இளைஞர்களை அடுத்த அரைமணி நேரத்தில் போலீஸார் சுற்றுப்போட்டு பிடித்தனர்.
ராயபுரத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (23). இவரது நண்பர் கார்த்திக் (23). இவரது பிறந்த நாளை நேற்று கொண்டாடினர். இதற்காக பிறந்த நாளை முன்னிட்டு நண்பர்கள் அனைவருக்கும் பீர் வாங்க பிரகாஷ் தனது நண்பன் சார்லஸுடன்(25 ) தனது இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணன் கோயில்தெரு தம்பு செட்டித் தெருவில் உள்ள டாஸ்மாக் கடை எதிரில் நிறுத்திவிட்டு அங்கே இருந்த தனது நண்பன் யுவராஜுடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத 3 இளைஞர்கள் அங்கு வந்தனர். மூவரும் பிரகாஷ் மற்றும் அவரது நண்பரிடம் கத்தியைக் காட்டி பீர் வாங்கித் தருமாறு மிரட்டியுள்ளனர். பிரகாஷ் மறுக்கவே கத்தியை காட்டி மிரட்டி அப்படியானால் பைக் சாவியைக்கொடு என மிரட்டி அவரது இருசக்கர வாகனத்தைப் பறித்துச் சென்று விட்டனர்.
இதைப் பார்த்த சிலர் அவர்களை போட்டோ எடுத்துவிட்டனர். உடனடியாக இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு கடற்கரை போலீஸ் ஆய்வாளர் புகைப்படத்தைப் பெற்று உடனடியாக அதை காசிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு அனுப்பி வைத்தார்.
உடனடியாக களத்தில் இறங்கிய காசிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் டீம் காசிமேடு அருகே அந்த 3 இளைஞர்களையும் மடக்கிப் பிடித்தனர். அவர்களைப் பிடித்த போலீஸார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பிரதீப் (21), மணிகண்டன் (26), முத்தையால்பேட்டையைச் சேர்ந்த விக்னேஷ் (18) ஆகியோர் தான் அந்த 3 பேர் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து இருசக்கர வாகனமும், அரிவாளும் பறிமுதல் செய்யப்பட்டது. அரைமணி நேரத்தில் போலீஸார் துரிதமாகச் செயல்பட்ட போலீஸாரை பொதுமக்கள் பாராட்டினர்.