தமிழகம்

குறைந்த செலவில் அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை: மதுரையில் பிரதமர் மோடி பேச்சு

செய்திப்பிரிவு

மக்களுக்கு உலக தரத்தில் சிகிச்சை அளிப்பதே மத்திய அரசின் நோக்கம் என மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடக்கவிழாவில் பிரதமர் மோடி பேசினார்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரிகளில சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.

பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது:

மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள மதுரைக்கு வந்தது மகிழ்ச்சி. இந்த நகரில் எய்ம்ஸ் மருத்துவமனையயை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சுகாதார துறையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சிறந்து விளங்குகிறது. நாட்டின் நான்கு திசைகளிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 1,200 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுகிறது. விரைவில் இது மக்களின் பயன்பாட்டுக்கு வரும். கடந்த 4.5 ஆண்டுகளில் மருத்துவ படிப்புகளில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. அனைவருக்கும் குறைந்த விலையில் சிகிச்சை கிடைக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது.

ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கி வைத்தது வரலாற்று சாதனை. இந்த திட்டம் மூலம் 10 கோடி குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்குகிறது.

இந்திய மக்களுக்கு, உலக தரத்தில் குறைந்த செலவில் சிகிச்சை கிடைக்க செய்வதே எங்களின் நோக்கம்.

தமிழகத்தில், 1,320 சுகாதார நிலையங்களை தமிழகம் செயல்பாட்டிற்கு கொண்டு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. 2023க்குள் காசநோயை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

SCROLL FOR NEXT