தமிழகம்

தேர்தலில் விழிப்புடன் பணியாற்ற வேண்டும்: திமுகவினருக்கு ஸ்டாலின் அறிவுரை

செய்திப்பிரிவு

தேர்தலில் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

சேலம் பாகல்பட்டியில் திமுக சார்பில் நடந்த வாக்குச் சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், ஸ்டாலின் பேசியதாவது:

தமிழகம் முழுவதும் நாம் நடத்தும் ஊராட்சி சபை கூட்டத்துக்கு மக்கள் அமோக ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மக்களிடம் எழுச்சி காணும் நிலையில், வரும் சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதியிலும் திமுக வெற்றி வாகைசூடும். தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன், சட்டப்பேரவை தேர்தலும் வர வாய்ப்புள்ளது.

மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் இவ்விரு ஆட்சிகளை அகற்ற திமுக நிர்வாகிகள் தேர்தலில் விழிப்புணர்வுடன் பணியாற்றிட வேண்டும். தமிகத்தில் விலைவாசி உயர்வு, லஞ்சம், ஊழல் மலிந்துள்ளதை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். எந்தவொரு மாநிலத்திலும் நடக்காத சம்பவமாக, கோடநாடு கொலை சம்பவத்துக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பக்கபலமாக இருந்துள்ளார் என்பதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

‘வெளிநாட்டு கருப்பு பணத்தை கைப்பற்றி ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் பணம் வழங்குவேன்’ என்ற மோடியின் பொய் பிரச்சார முகமூடியை மக்களிடம் அம்பலப்படுத்திட வேண்டும். உள்ளாட்சித் தேர்தலை நடத்தாத அதிமுக அரசை அப்புறப்படுத்திட திமுக அடிமட்ட தொண்டர் முதல் கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் பணியாற்றிட வேண்டும்.

ஆட்சி பொறுப்பேற்றதும் மக்களுக்கான அனைத்து அடிப்படை பிரச்சினைகளையும் நாம் தீர்வு காண்போம் என்பதை உறுதியாக கூறிக் கொள்கிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

SCROLL FOR NEXT