தமிழகம் முழுவதும் ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தலைமைச்செயலாளர் அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முனிகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார்.
அந்த வழக்கில் தமிழகம் முழுவதும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 19 ஆயிரம் ஏரிகள் உள்ளதாகவும், இந்த ஏரிகள் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
பெரும்பாலான ஏரிகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும், அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக கடந்த 2017-ம் ஆண்டு மத்திய கணக்கு தணிக்கை துறை தாக்கல் செய்துள்ள அறிக்கையில் 39,261 ஏக்டர் அளவில் ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதாக சுட்டிகாட்டியுள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள ஏரிகளை அளவீடு செய்து அதற்கு எல்லைகளை நிர்ணயிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன் ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கில் தலைமைச் செயலாளரை பிரதிவாதியாக சேர்த்து, கணக்கு தணிக்கை துறை அளித்த அறிக்கை குறித்து நிலை அறிக்கையை நான்கு வாரத்திற்குள் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.