இந்து முன்னணி வெள்ளையப்பன் உள்ளிட்ட 3 கொலை வழக்கு விசாரணை ஆவணங்கள் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.
வேலூர் இந்து முன்னணி மாநிலச் செய லாளர் வெள்ளையப்பன், சேலத்தில் ஆடிட் டர் ரமேஷ் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கொலை செய்யப்பட்ட வழக்கு கள் தொடர்பாக சிபிசிஐடி சிறப்புப் புலனாய் வுப் பிரிவு போலீஸார் விசாரணை மேற் கொண்டனர். அதில், தமிழக போலீஸாரால் தேடப்பட்டுவந்த தீவிரவாதிகள் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மா யில் ஆகியோருக்கு இந்தக் கொலையில் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த வழக்குகள் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை நடந்துவரும் நிலையில், தீவிரவாதிகள் மீதான வழக்குகளை விரைந்து முடிக்க வசதியாக சிறப்பு நீதிமன்றம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து, பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தீவிரவாதிகள் மீதான வழக்கு விசாரணை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், வேலூர் மாவட்ட சிபிசிஐடி போலீஸாரால் விசாரணை நடத்தப்பட்டு வந்த டாக்டர் அரவிந்த் ரெட்டி, வெள்ளையப்பன், பஞ்சாட்சரம் கொலை வழக்குகளின் ஆவணங்களை, சிபிசிஐடி டிஎஸ்பி வெள்ளையன் தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் மாலை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
இதற்கிடையில், வெள்ளையப்பன் கொலை வழக்கு தொடர்பாக தீவிரவாதிகள் மூவரும் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த வேண்டும். வழக்கின் ஆவணங்கள் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதால் இன்று பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்துவதா? அல்லது வீடியோ கான்ஃபரன்ஸ் முறையில் ஆஜர்படுத்துவதா என்பது குறித்தும் சிபிசிஐடி போலீஸார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.