மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த கதிரேசன், நடிகர் தனுஷ் தனது மகன் என உரிமை கோரி வருகிறார். தனக்கும், தனது மனைவி மீனாட்சிக்கும் மாதந்தோறும் பராமரிப்புச் செலவுக்குப் பணம் வழங்க தனுஷுக்கு உத்தரவிடக் கோரி மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தனுஷ் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அவரது மனு ஏற்கப்பட்டு மேலூர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த கதிரேசனின் வழக்கு ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் உயர் நீதிமன்றக் கிளையில் தனுஷ் போலி ஆவணங்களைத் தாக்கல் செய்ததாகவும், இதனால் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய கோ.புதூர் காவல் ஆய்வாளருக்கு உத்தரவிடக் கோரியும் மதுரை மாவட்ட 6-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் கதிரேசன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி சாமுண்டீஸ்வரி பிரபா, மனு தொடர்பாக பதில் அளிக்க தனுஷ், கோ.புதூர் காவல் ஆய்வாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை பிப்.13-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.