தி இந்து’ செய்தியை பொதுநலன் வழக்காக விசாரித்த உயர் நீதிமன் றம், மகாத்மா காந்தியின் தியாகத் தைப் போற்றும் வகையில் அவரது நினைவு தினமான இன்று தமிழகம் முழுவதும் மதுக்கடைகள், பார்கள், கிளப்புகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை அண்ணா நகர் சுகுணா ஸ்டோர் சந்திப்பில் தினமும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் பாதிக்கப்படுவது தொடர் பாக, ‘தி இந்து’ (ஆங்கில) நாளிதழில் நேற்று செய்தி வெளி யானது. இந்த சந்திப்பு அருகே செயல்படும் டாஸ்மாக் கடைக்கு வருவோர் கடை முன்பு வாகனங் களை நிறுத்தி வைப்பதால் போக்கு வரத்து நெரிசல் அதிகமாகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாமாக முன்வந்து வழக்கு
இந்த செய்தியைப் படித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், தாமாக முன்வந்து உள்துறை முதன்மைச் செயலர், மதுரை மாவட்ட ஆட்சியர், சென்னை மாநகர் காவல் ஆணையர், மதுரை போக்குவரத்து துணை ஆணையர், மதுரை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ஆகியோரை எதிர் மனுதாரராக சேர்த்து பொதுநலன் மனு தாக்கல் செய்யுமாறு பதிவாளருக்கு (நீதி) நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கை விசாரித்து நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவு:
அண்ணா நகர் சுகுணா ஸ்டோர் சந்திப்பில் செயல்படும் டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும். தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த ஆண்டில் உள்ளோம். ஜனவரி 30 மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட நாளாகும். ஜன 30-ல் மகாத்மா காந்தியின் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.
மதுவிலக்கு தினம்
மகாத்மா காந்தியின் தியாகத்தை மதிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று (ஜன.30) மதுவிலக்கு தினமாக அறிவித்து, டாஸ்மாக் கடைகள், மதுபானக்கூடங்கள், ஓட்டல் பார்கள், மனமகிழ் மன்றங்கள் என மது விற்பனை, விநியோகம் நடைபெறும் அனைத்து இடங் களையும் மூட வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர்.