புதிதாக சூரிய மின்சக்திக்கான கொள்கை இந்த ஆண்டில் வெளியிடப்படும் என்று தமிழக மின்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்துள்ளார்.
முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு நாளான நேற்று ‘புதுப்பிக் கத்தக்க எரிசக்தி துறையில் முதலீட்டுக்கான வாய்ப்புகள்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கு நடந்தது. இதில் தமிழக மின்துறை அமைச்சர் பி.தங்கமணி பேசியதாவது:
முதலீட்டாளர் மையம்
தேவைக்கும் அதிகமாக கூடு தல் மின் உற்பத்தி, அரசியல் ஸ்திரத்தன்மை, சிறப்பான முறை யில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு உள்ளிட்ட அம்சங்களால், உலக அளவில் முதலீட்டாளர்களுக்கான மையமாக தமிழகம் விளங்குகிறது.
தகவல் தொழில்நுட்பம், மருத்து வம், ஜவுளி, தோல் தொழில், வாகன உற்பத்தி போன்ற பல் வேறு துறைகளில் தமிழகம் முன்னணி மாநிலமாக உள்ளது.
தொழில் துறை வளர்ச்சி அடைய மின்சாரம் மிக முக்கியமானது. மின்சாரத் தட்டுப்பாடு இருந்தால் தொழில் துறை மிகப்பெரிய சிக்கலை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். நிலக்கரி, இயற்கை எரிவாயு போன்றவை தீர்ந்துவிடும் நிலையில் இருப்பதால், காற்றாலை, சூரியசக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வகைக ளில் அனைவரும் கவனம் செலுத்தி வருகின்றனர். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையிலும் தமிழகம் முன்னிலையில் உள்ளது. இது வரை 5,096 மெகாவாட் காற்றாலை மின்சாரம் தமிழக மின்பாதையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
சூரியசக்தி மின் திட்டத்துக்கான தனி கொள்கையை கடந்த 2012-ல் அப்போதைய முதல்வர் ஜெய லலிதா வெளியிட்டார். இதன்மூலம் தமிழகத்தில் மிகப்பெரிய அளவுக்கு மேற்கூரை சூரிய மின்சக்திக்கான கட்டமைப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு புதிதாக சூரிய ஒளி மின்சக்திக்கான கொள்கையை தமிழக அரசு வெளியிட உள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் சூரிய மின்சக்தி திட்டங்கள் பெரும் வேகமெடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.