தமிழகம்

ஊதிய முரண்பாட்டை சரிசெய்யக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதம்: புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண பொருட்களும் சேகரித்தனர்

செய்திப்பிரிவு

ஊதிய முரண்பாட்டை சரிசெய்யக் கோரி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் நேற்று உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கஜா புயலால் பாதிக் கப்பட்ட மக்களுக்காக நிவாரணப் பொருட்களையும் அவர்கள் சேகரித்தனர்.

தமிழகத்தில் கடந்த 31.05. 2009-க்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.8,370 ஆகவும் அதற்குப் பின்னர் நியமிக் கப்பட்டவர்களுக்கு ரூ.5,200-ஆக வும் முரண்பாடாக நிர்ணயிக்கப்பட் டது. எந்தவொரு ஊதியக் குழுவி லும் இதுபோன்று ஒரே பதவிக்கு இருவேறு அடிப்படை ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டதில்லை.

இந்த முரண்பாடுகளை சரி செய்யக்கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் அமைப்பு சார்பில் சென்னையில் வள்ளுவர் கோட்டம் முன்பு நேற்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. அந்த அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

போராட்டம் குறித்து ராபர்ட் நிருபர்களிடம் கூறியதாவது:

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களையக் கோரி கடந்த 2016-ம் ஆண்டு சென்னையில் தொடர் உண்ணா விரதப் போராட்டம் நடத்தினோம். அதன் முடிவில், அடுத்து வரும் 7-வது ஊதியக்குழுவில் ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என அப்போது முதல்வராக ஜெயலலிதா உத்தரவாதம் அளித் தார்.

உறுதிமொழி மீறிய அரசு

ஆனால், உறுதியளித்தபடி தமிழக அரசு நடந்துகொள்ள வில்லை. அதற்கும் மாறாக, ஊதிய முரண்பாடுகள் மேலும் அதிகரித்தன. அதில் 12 ஆண்டு கால வருடாந்திர ஊதிய உயர்வு வேறுபாடு ஏற்பட்டது. இதனால், 7-வது ஊதியக் குழுவை ஏற்காமல் சுமார் 10 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறோம்.

எங்கள் கோரிக்கையை நிறை வேற்றக்கோரி கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் குடும்பத்தோடு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டோம். அதையடுத்து, பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஒரு நபர் ஊதியக்குழுவுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது.

ஒரு நபர் குழு அறிக்கை

ஆனால், ஒரு நபர் குழுவின் காலக்கெடு கடந்த அக்டோபர் மாதம் 31-ம் தேதி முடிவடைந்து 3 வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இதுவரை ஒரு அறிக்கையும் தரவில்லை.

எனவே, ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி 3 கட்டங்களாக போராட் டத்தை நடத்த தீர்மானித்தோம். அதன்படி, முதல் கட்ட போராட்ட மாக இந்த அடையாள உண்ணா விரத போராட்டம் நடத்தப் படுகிறது.

இதைத்தொடர்ந்து, 2-வது கட்டமாக டிசம்பர் 4 முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்ட மும் நடைபெறும். அப்போதும் அரசு எவ்வித நடவடிக்கை எடுக்க வில்லை எனில் அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் மீண்டும் குடும்பத்தோடு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு ராபர்ட் கூறினார்.

நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு

உண்ணாவிரதப் போராட்டத் துக்கு இடையே, கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங் களைச் சேர்ந்த மக்களுக்கு வழங்குவதற்காக உணவுப் பொருட்கள், மருந்துகள் முதலான நிவாரணப் பொருட்களையும் ஆசிரியர்கள் சேகரித்தனர்.

SCROLL FOR NEXT