தமிழகம்

கட்சி கொடி கம்பம் நடும்போது லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு

செய்திப்பிரிவு

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக கட்சி கொடி கம்பம் நடும்போது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்துள்ளார்.

சென்னை டி.பி. சத்திரம் ஷெனாய் நகரைச் சேர்ந்தவர் சேகர். கூலி தொழிலாளியான இவர் கட்சி கொடி கம்பங்களை நடும் வேலையையும் செய்து வந்துள்ளார். இந்நிலையில், இவர் நேற்று திருவேற்காட்டில் அமமுக பிரமுகர் இல்ல திருமணத்தையொட்டி அமமுக கட்சி கொடி கம்பங்களை நடும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

மதுரவாயல் பைபாஸ் சாலையில் உள்ள டோல்கேட் அருகே கட்சி கொடி கம்பங்களை நட்டுக் கொண்டிருக்கும்போது கேரளாவிலிருந்து சென்னைக்கு ரசாயனத்தை ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று சேகர் மீது மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மற்றொரு விபத்து

திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் பாண்டி முருகன். வேன் ஓட்டுநரான இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த ஆழ்வார் (30) என்பவர் கிளீனராக பணி செய்து வந்தார். இந்நிலையில், இருவரும் நேற்று காலை நெற்குன்றம் பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு சென்றிருந்தனர். அப்போது, ஆழ்வார் இறங்கி பின்னால் நின்றார். இதை கவனிக்காமல் பாண்டிமுருகன் வேனை பின்நோக்கி இயக்கி விட்டார். இதில், ஆழ்வார் உயிரிழந்தார்.

SCROLL FOR NEXT