தமிழகம்

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஏன்?- உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்

செய்திப்பிரிவு

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஏன்? என்பது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த தாமோதரன், உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஜன. 8-ல் அனுப்பிய கடித நகல் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் கூறியிருப்பதாவது: திருவாரூர் எம்எல்ஏவாக இருந்த மு.கருணாநிதி மரணம் அடைந்ததால் காலியான அந்தத் தொகுதிக்கு புதிய பேரவை உறுப்பினரை தேர்வு செய்ய 6 மாதத்தில் அதாவது 6.2.2019-க்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். அதன்படி திருவாரூர் தொகுதிக்கு ஜன. 28-ல் இடைத்தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு, அது தொடர்பாக ஜன.3-ல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.

இதனிடையே கடந்த ஆண்டு நவ.15, 16-ல் வீசிய கஜா புயலால் திருவாரூர் உட்பட 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக திருவாரூர் தொகுதி அமைந்துள்ள திருவாரூர் மாவட்டம் கடும் பாதிப்பைச் சந்தித்து இருப்பதாகவும், இதனால் இந்த மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்ப 3 மாதங்களாகும் என்றும், இதனால் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ஏப்ரல் மாதத்துக்கு பிறகு நடத்தவும், 18 தொகுதிகளுக்கும் ஏப்ரல் மாதத்துக்கு முன் இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என்றும் தலைமைச் செயலர் தேர்தல் ஆணையத்துக்கு ஏற்கெனவே கடிதம் அனுப்பியிருந்தார்.

திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தலை ரத்து செய்யுமாறு சிபிஐ தேசியச் செயலர் டி. ராஜா, தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக்கொண்டார். தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்தும், கஜா புயல் நிவாரணப்பணிகளில் மாவட்ட நிர்வாகம் தீவிர மாக ஈடுபட்டிருப்பதால் தேர்தலை ஒத்திவைக்குமாறு கேட்டுக் கொண்டர்.

இதையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளிடம் இது தொடர்பாக கருத்துக்கேட்டு அறிக்கை அனுப்புமாறு மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டது. மாவட்ட தேர்தல் அதிகாரி 5.1.2019-ல் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் கம்யூனிஸ்ட், பாஜக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், அதிமுக, திமுக, தேமுதிக கட்சிகள் தேர்தலை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொண்டன.

இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய அறிக்கையில், புயல் பாதித்த மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பவில்லை, பொங்கல் பண்டிகை வருகிறது, தேர்வு நேரத்தில் தேர்தல் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்தினால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும், இப்போது தேர்தல் நடைபெற்றால் மக்களும், அரசியல் கட்சிகளும் தேர்தலில் ஆர்வமாக பங்கேற்க வாய்ப்பில்லை, இதனால் இடைத் தேர்தலை ஒத்திவைக்கலாம் எனக் கூறப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை ஏற்று திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பாக ஜன. 3-ல் வெளியான அறிவிப்பாணை ஜன. 6-ல் ரத்து செய்யப்பட்டது. இதனால் திருவாரூர் தொகுதியில் 6.2.2019-க்குள் இடைத் தேர்தல் நடத்த முடியாது. உரிய காலம் வந்ததும் திருவாரூர் தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

தொடர்ந்து மனுதாரர் வழக்கறிஞர் எஸ்.எம்.ஆனந்தமுருகன் வாதிடுகையில், தேர்தலை ரத்து செய்வதாக இருந்தால் மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்ற பிறகே ரத்து செய்ய வேண்டும். ஆனால் திருவாரூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்ட பிறகு மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இது சட்டவிரோதம் என்றார்.

இதையடுத்து விசாரணையை பிப்.5-க்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

SCROLL FOR NEXT