சபரிமலை கோயிலில் பெண்கள் சுவாமி தரிசனம் செய்ததால் வேதனை அடைந்த ஐயப்ப பக்தர்கள், சபரி யாத்திரையை பாதியில் முடித்துக்கொண்டு ஊர் திரும்பினர்.
சபரிமலை கோயிலில் கேரளா வைச் சேர்ந்த கனகதுர்கா (44), அம்மினி (40) ஆகிய 2 பெண்கள் நேற்று முன்தினம் சாமி தரிசனம் செய்தனர். இது ஐயப்ப பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், நாகர் கோவிலை அடுத்த கிருஷ்ணன் கோவில் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் (43), சிவபிரசாத் (32) ஆகிய 2 பக்தர்கள் 2 வாரங்களுக்கு முன்பு இருமுடி கட்டி பாதயாத்திரை யாக சபரிமலைக்கு புறப்பட்டனர்.
அவர்கள் நேற்று முன்தினம் மாலையில் எருமேலியை அடைந்த னர். சபரிமலையில் 2 பெண்கள் சாமி தரிசனம் செய்த தகவலை அறிந்து, மிகவும் வேதனை அடைந் தனர். தொடர்ந்து சபரிமலை செல்ல விருப்பம் இல்லாமல், யாத்திரையை பாதியில் முடித்துக் கொண்டு, பேருந்து மூலம் நேற்று திரும்பினர்.
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் அருகே உள்ள முன்னு தித்த நங்கை அம்மன் கோயிலில் தங்களது பயணத்தை நிறைவு செய்தனர். அஞ்சுகிராமத்தை அடுத்த குபேர ஐயப்ப சுவாமி கோயிலில் மாலையைக் கழற்றி விரதத்தை முடித்துகொண்டனர்.
பாதியில் திரும்பும் பக்தர்கள்
இதுகுறித்து சுபாஷ், சிவ பிரசாத் கூறும்போது, ‘‘ஐயப்பனை தரிசிப்பதற்காக எருமேலி வரை 220 கி.மீ. தூரம் நடந்தே சென்றோம். இந்த சூழலில், 2 பெண்கள் சபரி மலை சன்னிதானம் சென்றது, மிகுந்த வேதனை அளித்தது. அதனால் பாதியிலேயே திரும்பி விட்டோம். எங்களைப் போல, பல பக்தர்கள் பாதிவழியில் திரும்பிச் செல்கின்றனர்’’ என்றனர்.