தமிழகம்

திருவாரூர் இடைத்தேர்தல் தேதியை தள்ளிவைக்கக் கோரிய மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம்

செய்திப்பிரிவு

திருவாரூர் இடைத்தேர்தல் தேதியை  தள்ளி வைக்கக் கோரிய இடைக்கால மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

திருவாரூர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட தொகுதிக்கு வரும் 28-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் காவிரி டெல்டா விவசாய சங்கத்தைச் சேர்ந்த சத்தியநாராயணன் என்பவர், கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் பகுதியில் முழுமையாக நிவாரணப் பணிகள் நடைபெறவில்லை. மேலும் பொங்கல் பண்டிகை வருவதாலும் தேர்தல் வருவதால் திருவாரூரில் இடைதேர்தலை தள்ளிவைக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.

மேலும், தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியிட தடைவிதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் என்.ஜி.ஆர்.பிரசாத் ஆஜராகி வாதத்தை வைத்தார்.

அவரது வாதத்தில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூரில் நிவாரணப் பணிகள் நடந்து வரும் நிலையில், பலரின் வாக்காளர் அட்டைகள் தொலைந்து போயிருப்பதாகவும், அதைப் பெறுவதில் சிக்கல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. நிவாரணப் பணிகள், பொங்கல் பண்டிகை உள்ளபோது நியாயமான தேர்தல் நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் முன்னுதாரணமாக, 2009-ம் ஆண்டு பென்னாகரம் இடைத்தேர்தல் போல ஒத்திவைக்க ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளதாக என்.ஜி.ஆர்.பிரசாத் தெரிவித்தார்.

அப்போது தேர்தல் ஆணைய தரப்பில் நிரஞ்சன் ஆஜராகி, கருணாநிதி மறைந்த 6 மாதத்திற்குள் திருவாரூர் தொகுதிக்கு பிப்ரவரி 7-ம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும். திருப்பரங்குன்றம் தொகுதி தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

மேலும் மாநில நிலவரம் குறித்து அரசு தலைமைச் செயலாளருடன் ஆலோசித்த பிறகு தான் திருவாரூர் தொகுதிக்கு இடைதேர்தல் நடத்த தேதியை அறிவித்திருப்பதாக தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமர்வு, திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிப்பாணைக்குத் தடை விதிக்கக் கோரிய இடைக்கால மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

மேலும், கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் முடியும் வரை தேர்தலை நடத்தக்கூடாது என்ற பிரதான வழக்கில் தலைமைச் செயலாளரை எதிர் மனுதாரராக சேர்த்த நீதிபதிகள், வழக்கு குறித்து தேர்தல் ஆணையம், தமிழக தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT