தமிழகம்

சரக்குப் போக்குவரத்து, கப்பல் துறையில் புதிய திட்டங்களை வகுப்பதற்காக பிப்.8-ம் தேதி சரக்கு இணைப்பு மாநாடு: இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் நடத்துகிறது

செய்திப்பிரிவு

சரக்குப் போக்குவரத்து மற்றும் கப்பல் துறையில் உள்ள பிரச்சி னைகள் குறித்து விவாதித்து புதிய திட்டங்களை வகுப்பதற்காக, இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதன் முறையாக சரக்கு இணைப்பு மாநாடு வரும் பிப்.8-ம் தேதி நடைபெறுகிறது. இதில், மத்திய வர்த்தகத் துறைச் செயலர், சுங்கத்துறை மற்றும் ஜிஎஸ்டி துறைத் தலைமை ஆணையர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

இதுகுறித்து, இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் (பியோ) தென்மண்டல தலைவர் இஸ்ரார் அகமது வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், இந்திய கடல்சார் வணிக அமைப்புகளுடன் இணைந்து முதன்முறையாக, சரக்கு இணைப்பு மாநாட்டை வரும் பிப்.8-ம் தேதி கோவையில் நடத்துகிறது. இந்த மாநாட்டில் சரக்குகள் ஏற்றுமதி, இறக்குமதி, சரக்குப் போக்குவரத்து மற்றும் கப்பல்துறையில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அத்துடன், திறன்மிக்க சரக்கு கட்டமைப்புகள் ஏற்படுத்துவது மற்றும் சேவைகள் வழங்குவது குறித்து ஒரு திட்ட வரைபடம் தயாரிக்கப்படும்.

முக்கிய பிரச்சினைகள்

சரக்குகளை விரைவாக ஏற்றுமதி, இறக்குமதி செய்வது, சரக்குகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு விரைவாகக் கொண்டு செல்வது, அதற்கான கட்டண செலவு ஆகியவை தற்போது முக்கியப் பிரச்சினைகளாக உள்ளன.

இதுகுறித்து, இப்போது விவா திக்கப்படவில்லை என்றால், சர்வதேச சந்தையில் உள்ள போட்டியை சமாளிப்பது மிகவும் கடினமாகி விடும். எனவே, இப்பிரச்சினைகள் குறித்து அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல இந்த மாநாடு வழிவகை செய்யும்.

இவ்வாறு இஸ்ரார் அகமது தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT