மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி அவர்களின் நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் நேற்று மரியாதை செலுத்தினர்.
தமிழகத்தில் இந்தி மொழி திணிப்புக்கு எதிராக நீண்டபோராட்டங்கள் நடந்தன. போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்களில் சிலர் சிறைக் கொடுமை தாங்காமல் உயிரிழந்தனர். ஜனவரி 25 1965-ம் ஆண்டு நடந்த பெரும் போராட்டத்தில் பலர் குண்டடி பட்டும், தீக்குளித்தும் தங்கள் உயிரை இழந்தனர். மொழிப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 25-ம் நாளை மொழிப்போர் தியாகிகள் தினமாக அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள் கடைபிடிக்கின்றன.
வீரவணக்க நாள் அதன்படி, தமிழகம் முழுவதும் மொழிப்போர் தியாகிகள் தினம், வீரவணக்க நாளாக நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள மொழிப்போர் தியாகி ஒய்.அரங்கநாதன் நினைவிடத்தில் திமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் தலைமையில் திமுகவினர் பேரணியாகச் சென்று மரியாதை செலுத்தினர். இதில், திமுக எம்எல்ஏக்கள் தாயகம் கவி, அரவிந்த் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
மதிமுக சார்பில் அந்தரிதாஸ், வந்தியத்தேவன் உள்ளிட்டோரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தலைமை நிலைய செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோரும் மூலக்கொத்தளத்தில் உள்ள மொழிபோர் தியாகிகள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.