தமிழகம்

10 சதவிகித இட ஒதுக்கீட்டை எதிர்த்து  திமுக வழக்கு: விரைவில் உயர் நீதிமன்றத்தில் விசாரணை

செய்திப்பிரிவு

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு பொருளாதார அடிப்படையில் 10  சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு கொண்டுவந்த சட்ட மசோதாவை ரத்து செய்ய கோரி திமுக தொடர்ந்த வழக்கு விரைவில் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சமுதாயத்தினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை மத்திய அரசு தற்போது புதிதாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தாக்கல் செய்து ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெற்று சட்டமாக அமல்படுத்தியுள்ளது.

மாநிலங்கவையில் திமுக உள்ளிட்ட கட்சிகள் இதை எதிர்த்து வாக்களித்தாலும் கூட்டணியின் பிரதான கட்சியான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரித்து வாக்களித்தன. இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டை கடுமையாக எதிர்த்து வருகிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.

இந்நிலையில் இதனை எதிர்த்து திமுக சார்பில் அக்கட்சியின் அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ். பாரதி வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அவர் தொடர்ந்த வழக்கில் கூறியிருப்பதாவது:

 அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கி பட்டியல் இனத்தவருக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது . இந்நிலையில் முன்னேறிய வகுப்பினர்களுக்கு பொருளாதார அடிப்படையில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால் எற்கனவே வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டில் பாதிப்பு ஏற்படும்.

இதை வறுமை ஒழிப்பு திட்டமாக கருதக்கூடாது. ஏற்கனவே நாடாளுமன்றத்தில் திமுக சார்பில் கொண்டுவந்த சட்ட மசோதாவை கடுமையாக எதிர்த்துள்ளோம், மேலும் மசோதாவிற்கு எதிராகவும் வாக்களித்துள்ளோம். எனவே இந்த இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிராக உள்ளது. இந்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

வழக்கு  நீதிபதிகள் மணிகுமார், சுப்பிரமணிய பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை வரும் திங்கட்கிழமை வர உள்ளது.

SCROLL FOR NEXT