சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒருமாதத்துக்கு தேவையான அளவு நீர் மட்டுமே இருப்பு இருப்பதால், நகரில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க சிக்கராயபுரம் உட்பட 22 கல் குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுக்க சென்னைக் குடிநீர் வாரியம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்இருப்பு குறைந்து கொண்டே செல்வதால், மாற்று நீர் ஆதாரங்கள் மூலமாக குடி நீர் தேவையைப் பூர்த்தி செய்ய பொதுப்பணித் துறையும் சென்னைக் குடிநீர் வாரியமும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம் பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,257 மில்லியன் கனஅடி. நேற்றைய நிலவரப்படி 1,054 மில்லியன் கன அடி மட்டுமே நீர்இருப்பு இருந்தது. இந்த நீரைக் கொண்டு மாநகரின் குடிநீர் தேவையை ஒரு மாதம் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும்.
அதனால் வரும் காலங்களில் குறிப்பாக கோடை காலத்தில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டால் அதனைச் சமாளிக்க சிக்கராயபுரம் உட்பட 22 குவாரி களில் இருந்தும் விவசாயக் கிணறு களில் இருந்தும் தண்ணீர் எடுக்க குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரி கூறியதாவது:
சிக்கராயபுரம் கிராமத்தைச் சுற்றியுள்ள 22 கல்குவாரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரி வரை 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஏற்கெனவே குழாய்கள் பதிக்கப் பட்டுள்ளன. இவற்றில் மொத்தம் 1,500 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. இங்கு எடுக்கப்படும் தண்ணீர், செம்பரம்பாக்கம் தண் ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு சென்னைக்கு விநியோகிக்கப்படும்.
கல்குவாரிகளில் உள்ள இணைப்புக் குழாய்களை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி முடிந்ததும் அங்கிருந்து விரைவில் தண்ணீர் எடுக்கப்படும். சென்னையில் தினமும் 650 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. வீராணம் ஏரியில் இருந்து 180 மில்லியன் லிட்டர், கடல்நீரைக் குடிநீராக்கும் 2 நிலையங்களில் இருந்து 200 மில்லியன் லிட்டர், ஏரிகளில் இருந்து 270 மில்லியன் லிட்டர் என மொத்தம் 650 மில்லியன் லிட்டர் தண்ணீர் பெறப்படுகிறது.
விரைவில் கல்குவாரிகளில் இருந்து தினமும் 30 மில்லியன் லிட்டரும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாயக் கிணறுகளில் இருந்து தினமும் 120 மில்லியன் லிட்டரும் தண்ணீர் பெறப்படும். மாற்று நீர் ஆதாரங்களில் போதி யளவு தண்ணீர் இருப்பதால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்றார் அவர்.நேற்றைய நிலவரப்படி 1,054 மில்லியன் கன அடி நீர்இருப்பு இருந்தது. இந்த நீரைக் கொண்டு மாநகர குடிநீர் தேவையை ஒரு மாதம் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும்.